ஜனாதிபதி கிண்ணத்துக்கான இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் நோக்கில், விறுவிறுப்பாக இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லுரி அணி 4-2 என்ற கோல்கள் கணக்கில் டி மெசனொட் கல்லூரி அணியை வெற்றி கொண்டுள்ளது. ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி அணி 6-0 என்ற கோல்கள் அடிப்படையில் புத்தளம் ஸாஹிரா கல்லூரி அணியை வெற்றியீட்டியது. எனவே இவ்விரு அணிகளும் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி எதிர் டி மெசனொட் கல்லூரி
இவ்விரு அணிகளுக்கிடையிலான விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, டி மெசனொட் கல்லூரியை 4-2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றியீட்டியது.
புனித பேதுரு கல்லூரியுடனான விறுவிறுப்பான காலிறுதிப் போட்டி 1-1 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் நிறைவடைய, பெனால்டி வாய்ப்பின்மூலம் 3-2 என்ற கோல்கள் அடிப்படையில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி வெற்றியீட்டி, அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
அதேபோன்று டி மெசனொட் கல்லூரி அணி, 19 வயதுக்குப்பட்ட டிவிசன் 1 போட்டிகளில் இரண்டாம் இடத்தை பெற்றிருந்த களுத்துறை திருச் சிலுவைக் கல்லூரி அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டு அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொழும்பு ரேஸ் கொஸ் மைதானத்தில் இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில், 14ஆவது நிமிடத்தில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரிக்கு கிடைக்கப்பெற்ற ப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி தத்சர பெர்னாண்டோ முதலாவது கோலைப் பெற்றார்.
எனினும், அதனை தொடர்ந்து சிறிய நேரத்திற்குள் டி மெசனொட் கல்லூரியின் முன்கள வீரர் சுதன் அன்டனி பந்தை கம்பங்களுக்குள் செலுத்த, பிடிப்பதற்கு இலகுவாக வந்த பந்தை கோல் காப்பாளர் உமேஷ் சஞ்சய தடுக்கத் தவறினார்.
அதேநேரம், மாரிஸ் ஸ்டெல்லா அணி பெற்றுக்கொண்ட கோணர் உதை மூலமாக உள்வந்த பந்தை அணித் தலைவர் அஞ்சன குணவர்தன சிறந்த முறையில் கோல் கம்பங்களுக்குள் செலுத்தி, அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றுக்கொடுத்தார். இதன் மூலம் முதல்பாதியை மாரிஸ் ஸ்டெல்லா அணியினர் முன்னிலைப்படுத்தினர்.
முதல் பாதி: டி மெசனொட் கல்லூரி 1 – 2 மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரிக்கு சாதகமாக அமைந்திருந்த இரண்டாம் பாதியின் 6ஆவது நிமிடம் அவ்வணிக்கு கிடைக்கப்பெற்ற ப்ரீ கிக் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட தத்சர பெர்னாண்டோ இலகுவாக கோல் கம்பதுக்குள் பந்தை செலுத்தி தனது இரண்டாவது கோலையும் பெற்றார்.
இரண்டு கோல்களால் பின்னிலையுற்ற நிலையில் டி மெசனொட் அணிக்கு பல வாய்ப்புக்கள் கிடைக்கப் பெற்றிருந்தாலும், அவர்கள் அவற்றை சரிவர பயன்படுத்திக்கொள்ளத் தவறினர்.
இந்நிலையில், பெனால்டி எல்லைக்குள் வைத்து தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்ட அவிஷ்க தேஷான், பலத்த போராட்டத்துக்கு மத்தியில் டி மெசனொட் கல்லூரி சார்பாக இரண்டாவது கோலை பதிவு செய்துகொண்டார்.
ஆட்டத்தில் இறுதி நிமிடங்கள் சூடு பிடித்திருந்த நிலையில், டி மெசனொட் கல்லூரி போட்டியை பெனால்டி நிலைக்கு எடுத்து செல்வதற்கு பல்வேறான முயற்சிகளை மேற்கொண்டது.
எனினும் அவர்களது முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், ஆட்டத்தின் மேலதிக நிமிடத்தில் நிசல் சில்வா மூலம் மாரிஸ் ஸ்டெல்லா அணியினர் தமது நான்காவது கோலையும் பெற, மேலதிக இரண்டு கோல்களுடன் அவ்வணி வெற்றி பெற்றது.
முழு நேரம் : – டி மெசனொட் கல்லூரி 2 – 4 மாரிஸ் ஸ் டெல்லா கல்லூரி
கோல் பெற்றவர்கள்
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – தத்சர பெர்னாண்டோ 14’ & 41’, அஞ்சன குணவர்தன 31’ , நிசல் சில்வா 70+3’
டி மெசனொட் கல்லூரி – சுதன் அந்தோனி 26’ , அவிஷ்க தேஷான் 55’
ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி எதிர் புத்தளம் ஸாஹிரா கல்லூரி
இரண்டாவது அரையிறுதியாக ரேஸ் கோஸ் மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில், ஆரம்பத்திலிருந்து ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியிருந்தது.
முன்தாக காலிறுதிப் போட்டியில் நாலந்த கல்லூரியுடன் மோதிய ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி, 4-0 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வெற்றியீட்டி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.
அதேநேரம், கொழும்பு லும்பினி கல்லூரியுடன் மோதிக்கொண்ட புத்தளம் ஸாஹிரா கல்லூரி அணி, பலத்த போட்டியின் மத்தியில் 4-3 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது.
இப்போட்டியில் புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் மிகவும் பலவீனமான பின்களத் தடுப்புக்கு மத்தியில், ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி முதல் பாதி நேரத்துக்குள் சிறந்த பந்து பரிமாற்றங்களின் மூலம் 4 கோல்களை இலகுவாக பெற்றுக்கொண்டது.
புத்தளம் ஸாஹிரா கல்லூரிக்கு இலவச உதை வாய்ப்பொன்று கிடைக்க பெற்ற போதும் அது ஹமீத் அல் ஹுசைனி கோல் காப்பாளர் மகேந்திரன் தினேஷ்சினால் தடுக்கப்பட்டது.
முதல் பாதி: ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி 4 – 0 புத்தளம் ஸாஹிரா கல்லூரி
இரண்டாவது பாதியில் புத்தளம் ஸாஹிரா கல்லூரி முழு பலத்துடன் போராடிய போதிலும், அவர்களால் எவ்விதமான கோல்களையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
அதேநேரம் சற்று தேய்வடைந்து காணப்பட்ட ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி, மூன்று நிமிட இடைவெளியில் தொடர்ந்து இரண்டு கோல்களை அடித்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இலகுவாகப் பெற்றுக்கொண்டது.
முழு நேரம் – ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி 6 – 0 புத்தளம் ஸாஹிரா கல்லூரி
கோல் பெற்றவர்கள்
ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி – எம்.அமான் 7′, எம்.ரிஷான் 10′, எம்.சஹன் 28 ‘, 56’, எஸ்.அபிஷயன் 33 ‘, எம்.ஆதில் 53′
எச்சரிக்கை அட்டைகள்
மஞ்சள் அட்டைகள்
ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி – எம் சஹன் 47 ‘
புத்தளம் ஸாஹிரா – எம்.ஹயாம் 18′, எம். பௌசான் 65’
அரையிறுதிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜனாதிபதிக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 22ஆம் திகதி ரேஸ் கோஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.