இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சம்மேளனம் ஆகியன விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் முதற்தடவையாக ஏற்பாடு செய்த உள்ளூர் வலைப்பந்தாட்ட சங்கங்களுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட வல்லவர் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் யாழ். மாவட்ட சங்க ஏ அணியை வீழ்த்திய வர்த்தக வலைப்பந்தாட்ட சங்க அணி சம்பியன் பட்டத்தை வென்றது.
Photos: Inter Association Netball Tournament 2018 (Semi Finals)
Photos of Inter Association Netball Tournament 2018 (Semi Finals) Title Inter …
கடந்த 3 தினங்களாக யாழ். துரையப்பா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டித் தொடரில் நாடளாவிய ரீதியிலிருந்து 10 அணிகள் கலந்து கொண்டிருந்தன. நேற்று(26) நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ். மாவட்ட சங்க வலைப்பந்தாட்ட ஏ அணியும், வர்த்தக வலைப்பந்தாட்ட சங்க அணியும் பலப்பரீட்சை நடத்தின.
10 நிமிடங்களைக் கொண்ட நான்கு பகுதிகளாக நடத்தப்பட்ட இறுதிப் போட்டியின் முதல் பாதியில் 15-4 என்ற புள்ளிகள் அடிப்படையில் வர்த்தக வலைப்பந்தாட்ட அணி முனனிலை பெற்றது.
போட்டியின் இரண்டாவது பாதியிலும் தமது ஆதிக்கத்தை செலுத்திய வர்த்தக வலைப்பந்தாட்ட அணி, இடைவேளையின் போது 31-8 என முன்னிலை பெற்றது.
இதனையடுத்து மூன்றாவது பாதியில் 12-4 எனவும், இறுதிப் பாதியில் 10-7 எனவும் முன்னிலை பெற்ற வர்த்தக வலைப்பந்தாட்ட அணி, இறுதியில் 53-19 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தனதாக்கியது.
வர்த்தக வலைப்பந்தாட்ட அணி சார்பாக, தர்ஜினி சிவலிங்கம் 43 புள்ளிகளையும், யாழ். வலைப்பந்தாட்ட அணி சார்பாக எழிலேந்தினி சேதுகாவலன் 11 கோல்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.
Photos : Inter Association Netball Tournament 2018 – finals
Photos of Inter Association Netball Tournament 2018 – finals Title Inter …
எனினும், நேற்று காலை நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் அரச சேவைகள் வலைப்பந்தாட்ட சங்க அணியை தேசிய அணி வீராங்கனைகளைக் உள்ளடக்கிய வர்த்தக வலைப்பந்தாட்ட அணி, 50-15 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டியது.
இதேநேரம், நேற்று காலை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் யாழ். மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தைச் சேர்ந்த ஏ மற்றும் பி அணிகள் பங்குபற்றியிருந்தன. இதில் 41-21 என்ற புள்ளிகள் அடிப்படையில் யாழ். மாவட்ட ஏ அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இம்முறைப் போட்டித் தொடரில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், இதில் யாழ், யூனியன் கல்லூரியின் பழைய மாணவியான அபிதா தர்மராஜா மற்றும் யாழ். வைத்தீஸ்வரா கல்லூரியின் பழைய மாணவியான எழிலேந்தினி சேதுகாவலன் ஆகிய வீராங்கனைகள் அபாரமாக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.