இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக எதிர்வரும் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை மகளிர் அணியின் தலைவியாக இடதுகைப் பந்து வீச்சாளர் இனோகா ரனவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்பொழுது அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹேமன்த தேவப்பிரியவின் வழிகாட்டலின் கீழ் விளையாடவுள்ள இலங்கை மகளிர் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் இறுதியாக இடம்பெற்ற அவுஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான தொடரில் இலங்கை அணியில் உள்வாங்கப்படாமல் இருந்த அனுபவ வீராங்கனைகளான ஒஷாதி ரனசிங்க மற்றும் சிறிபாலி வீரக்கொடி ஆகியோர் மீண்டும் அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, கடந்த மாதம் இடம்பெற்ற மாகாணங்களுக்கிடையிலான T20 சம்பியன்ஷிப் போட்டிகளில் சிறந்த திறமையை வெளிப்படுத்திய ஹன்சிம கருனாரத்னவும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, சகலதுறை வீராங்கனை எஷானி லொகுசூரிய மற்றும் ஒதேஷிகா ப்ரபோதனி ஆகியோருடன் சேர்த்து இளம் வீராங்கனை ஹர்சிதா மாதவி ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில் ஹர்சிதா மாதவி, அண்மையில் இடம்பெற்ற மாகாண மற்றும் பாடசாலை மட்ட போட்டிகளில் சிறந்த முறையில் பிரகாசிக்கத் தவறியமையினாலேயே அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.
ஷாமரி அத்தபத்துவின் தலைமையின் கீழ் இறுதியாக இடம்பெற்ற அவுஸ்திரேலியாவுடனான 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் T20 தொடர் என்பவற்றை இலங்கை மகளிர் அணி முழுமையாக தோல்வியுற்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும், இலங்கை மகளிர் அணியின் வழமையான தலைவியான ஷசிகலா சிறிவர்தன உபாதையில் இருந்து இன்னும் மீளாத காரணத்தினால் அவருக்கு தொடர்ந்தும் அணியில் இணைந்துகொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்துடனான தொடருக்கான இலங்கை மகளிர் குழாம்
இனோகா ரனவீர (தலைவி), பிரசாதினி வீரக்கொடி (துணைத் தலைவி), டிலானி மனோதரா, நிலக்ஷி சில்வா, அமா கான்ஷனா, ஹசினி பெரேரா, ஷாமரி பொல்கம்பொல, ஷாமரி அத்தபத்து, நிபுனி ஹன்சிகா, சிறிபாலி வீரக்கொடி, சுகன்திக குமாரி, ஒஷாதி ரனசிங்க, ஹன்சிம கரனாரத்ன, அஷினி குலசூரிய