இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான T-20 தொடரின்போது ஏற்பட்ட உபாதையின் காரணமாக இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் நாடு திரும்ப இருக்கின்றார். அவருடன் சேர்ந்து, ஏற்கனவே இத்தொடரின்போது உபாதைகள் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த தனுஷ்க குணத்திலக்க மற்றும் நுவான் பிரதீப் ஆகியோரும் நாடு திரும்புகின்றனர்.
நேற்று (22) நடைபெற்று முடிந்த இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T-20 போட்டியின்போது ஏற்பட்ட உபாதையினால் இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, தென்னாபிரிக்காவுடனான இந்த சுற்றுத் தொடரின் ஏனைய போட்டிகளில் அவர் பங்குகொள்ள மாட்டார் என அறியக்கிடைக்கின்றது.
தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை அணி
ஜோகனஸ்பேர்க், நியூ வாண்டரஸ் மைதானத்தில்ந டைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான விறுவிறுப்பான இரண்டாவது T20 போட்டியில்…
நேற்றைய போட்டியில் இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 113 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை பெற ஆடிக்கொண்டிருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் போட்டியின் கடைசி ஓவருக்கு முன்னரான ஓவர் வீசப்பட்டுக்கொண்டிருந்த போது, ரன் அவுட்டில் இருந்து தன்னைக் பாதுகாத்துக்கொள்ள துடுப்பாட்ட வீரர் முனையினை நோக்கி விரைந்து கொண்டிருந்தார். இதன்போது அவர் டைவ் ஒன்றினை மேற்கொள்ள முயற்சித்த வேளை, காலில் அடிபட்டதன் காரணமாக, தனது கணுக்காலினை முறுக்கிகொண்டவாறு மைதானத்தில் வீழ்ந்து உபாதைக்கு உள்ளாகினார்.
எனினும் உபாதையுடன் விளையாடிய அவர், இறுதி ஓவரில் இரண்டு சிக்சர்களை விளாசி அணியின் வெற்றிக்காக தனது முழுப் பங்களிப்பையும் வழங்கினார்.
அதேபோன்று, கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்சூரியன் நகரில் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடைபெற்று முடிந்த T-20 போட்டியில், தனது முதல் ஓவரினை வீசிய போது நுவான் பிரதீப் காயமடைந்தார். பிடியெடுப்பு ஒன்றினை பெறுவதற்காக முயற்சித்து அதன் மூலம் கையில் ஏற்பட்ட முறிவு ஒன்றின் காரணமாக பாதிக்கப்பட்டமையினால் அவரும் இத்தொடரின் ஏனைய போட்டிகளில் விளையாடாமல் வெளியேறுகின்றார்.
மேலும், முதுகில் ஏற்பட்ட உபாதை காரணமாக இத்தொடரில் தனுஷ்க குணத்திலக்க விளையாடுவதும் சந்தேகத்திற்கு உள்ளாகியிருந்தது. இதனால், முதலாவது T-20 போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாட இருந்த அவரின் வாய்ப்பு தடைப்பட்டதுடன், இரண்டாவது T-20 போட்டியிலும் அந்நிலை நீடித்தது.
இவ்வாறான ஒரு நிலையில், குசல் ஜனித் பெரேரா இத்தொடரில் விளையாட தென்னாபிரிக்காவிற்கு வரவழைக்கப்படுகின்றார் என்றும், எதிர்வரும் புதன் கிழமை (25) இடம்பெற இருக்கும் மூன்றாவது T-20 போட்டிக்கு அணியை தினேஷ் சந்திமால் தலைமை தாங்குவார் என்றும் எமக்கு கிடைத்திருக்கும் தகவல்களின் படி அறிய முடிகின்றது.
T-20 போட்டிகளுக்கு மாத்திரமே சந்திமால் தலைவராக செயற்படுவார் என்றும், ஜனவரி 28ஆம் திகதி ஆரம்பமாக இருக்கும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கு இலங்கை அணித்தலைவராக உபுல் தரங்கவின் பெயர் பரிந்துரை செய்யப்படலாம் எனவும் எமக்கு மேலும் அறியக்கிடைத்துள்ளது.