இளம் வீரர்களை அதிகமாகக் கொண்ட இலங்கை அணிக்கு அண்மைக்காலமாக இடம்பெற்ற உபாதைகள் மிகப் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியது என ESPN cricinfo நிறுவனத்துடனான நேர்காணலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அதிகமான இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியினர் கடந்த சில நாட்களாக தொடர் தோல்விகளை அதிகம் சந்தித்து வருகின்றனர். இவ்வாறான ஒரு நிலையில், அணி மீதான அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. எனினும், இலங்கை அணியில் பிரகாசித்த முன்னாள் வீரர்கள் பலரும் இலங்கை அணிக்கு இந்த நேரத்தில் தமது ஆதரவை சாதகமான முறையில் வழங்க வேண்டும் என்பதையே தெரிவித்து வருகின்றனர்.
மாலிங்கவின் ஆட்டம் குறித்து நிக் போத்தாஸ் மற்றும் கோஹ்லி ஆகியோரின் கருத்து
அண்மைய காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியிருக்கும் நட்சத்திர பந்து வீச்சாளர் லசித்…
இலங்கை அணியை வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுக்க ரசிகர்களின் பங்களிப்பு மிக முக்கியம் என அண்மையில் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்பொழுது மற்றொரு முன்னாள் வீரரும் அணித் தலைவருமான மஹேல ஜயவர்தனவும் இது குறித்து தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் ‘உலகின் முன்னணி அணியொன்றுக்கு எதிராக விளையாடுவதென்பது மிகச் சவாலான விடயம். இலங்கை அணி களத்தில் நிலமைகளை முறையாகக் கையாளவில்லை என்றே கூறலாம். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் காணப்பட்ட குறைபாடுகள் இலங்கை அணியை வெகுவாகப் பாதித்தது. மேலும் எமது பந்து வீச்சாளர்களால் இந்திய அணி மீது போதியளவு அழுத்தத்தை பிரயோகிக்க முடியாமல் போனமையும் தோல்விக்கு காரணமாகும்.
துரதிஷ்டவசமாக வீரர்களின் உபாதைகள் இலங்கை அணிக்கு மிகப் பெரிய அழுத்தத்தை கொடுத்தது. அதிலும் குறிப்பாக நுவான் பிரதீப்பின் இழப்பு அணியின் நிலமையை மோசமாக்கியது எனலாம். லக்ஷான் சந்தக்கன் சிறந்த சைனமன் பந்து வீச்சாளர், விஷ்வ பெர்ணான்டோ சிறந்த இடதுகைப் பந்து வீச்சாளர். அவ்வாறாக இருந்தும் நேர்த்தியாக பந்து வீசுவதில் பிரச்சினை உள்ளது. இதற்குக் காரணம் போதிய அனுபவம் இன்மையே‘ என தெரிவித்தார்.
இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடும் வீரராக குசல் மென்டிஸைக் குறிப்பிட்ட மஹேல, ‘மென்டிஸ் கிரிக்கெட் பற்றி தெறிந்த மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர். மிகவும் இளமையான அவர் விளையாடும் விதம் அற்புதமானது. ஒவ்வொரு நாளும் புதிதாக விடயங்களைக் கற்றுக்கொள்ளும் அவர் மீது, அவர் விடும் தவறுகளுக்காக தேவையில்லாத அழுத்தத்தை பிரயோகிக்கக் கூடாது‘ என தெரிவித்தார்.
விராத் கோலி பற்றி கருத்துத் தெரிவித்த மஹேல, ‘அவர் ஒரு உயிர்ப்பான அணித் தலைவர். நிலமைகளை மிகச் சிறப்பாக கையாளும் ஒரு தலைவர். மைதானத்திலும் மைதானத்திற்கு வெளியேயும் அணியின் வெற்றிக்காக ஆக்ரோசமாக செயற்படும் ஒரு வீரர். அத்துடன் தலைவர் என்ற வகையில் அணியை முன்னின்று வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒரு அற்புதமான தலைவர்‘ எனத் தெரிவித்தார்