T20 உலகக் கிண்ண முதல் ஆட்டத்தை தவறவிடும் பங்களாதேஷ் வீரர்?

Bangladesh Cricket

140
Bangladesh Cricket

பங்களாதேஷ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷொரிஃபுல் இஸ்லாம் T20 உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.

20 அணிகள் கலந்து கொண்டுள்ள 9ஆவது T20 உலகக் கிண்ணத் தொடர் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் குழு D இல் இடம்பெற்றுள்ள பங்களாதேஷ் அணி தனது முதல் ஆட்டத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி இலங்கை அணியை எதிர்கொள்கிறது.

இந்த, நிலையில் இலங்கையுடனான போட்டியில் பங்களாதேஷ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷொரிஃபுல் இஸ்லாம் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது இடது கையில் காயம் அடைந்த ஷொரிஃபுல் இஸ்லாமுக்கு ஆறு தையல் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் குணமடைய குறைந்தது ஒரு வாரமாவது தேவைப்படும் என்றும், இதன் காரணமாக டலாஸில் நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஷொரிபுல் இஸ்லாம் 3.5 ஓவர்கள் பந்துவீசி 26 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

எவ்வாறாயினும், ஷொரிஃபுல் இஸ்லாமின் காயம் குணமடைய இன்னும் சில வாரங்கள் எடுக்கும் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவரால் இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் விளையாட முடியாமல் போகலாம் என பங்களாதேஷ் கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை ஷொரிஃபுல் இஸ்லாமுக்கு உலகக் கிண்ணத்தில் விளையாட முடியாமல் போனால் அவருக்குப் பதிலாக மேலதிக வீரர்களில் இடம்பிடித்துள்ள மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான ஹஸன் மஹ்முத் 15 பேர் கொண்ட பங்களாதேஷ் குழாத்தில் இணையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<