பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லொக்கி ஃபெர்குசன் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் பலமிக்க அணிகளில் ஒன்றாக வலம்வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி, இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4இல் வெற்றி பெற்று 2இல் தோல்வி அடைந்து 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. இதில் நடப்புச் சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் நேற்று நடைபெற்ற போட்டியில் அந்த அணி 16 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.
இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் லொக்கி ஃபெர்குசன் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது லொக்கி ஃபெர்குசன் தொடைப் பகுதியில் காயத்தை சந்தித்தார். அதன் பின் காயம் தீவிரமடைந்ததை அடுத்து ஓவரை முழுமையாக வீசாமல் பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார். இதன் காரணமாக அந்த ஓவரின் எஞ்சிய பந்துகளை மார்கஸ் ஸ்டொய்னிஸ் வீசி இருந்தார். எவ்வாறாயினும், குறித்த போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியடைந்ததற்கு ஃபெர்குசனின் காயமும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது.
இதனிடையே, லொக்கி ஃபெர்குசன் காயம் தொடர்பில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் கூறுகையில், லொக்கி ஃபெர்குசன்; இந்த சீசனில் காலவரையின்றி விளையாட மாட்டார் என்றும் இந்த சீசனில் அவர் மீண்டும் விளையாடுவது சந்தேகமே எனவும் உறுதிப்படுத்தியுள்ளார். ஃபெர்குசன் விளையாடிய நான்கு போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிகச்சிறந்த ; வேகப்பந்து வீச்சாளரான அவர் விலகி இருப்பது பஞ்சாப் அணிக்கு பெரும் பின்னடைவாகும்.
இது இவ்வாறிருக்க, லொக்கி ஃபெர்குசன் விலகியதால் அவருக்குப் பதிலாக யார் அணியில் சேர்க்கப்படுவார்கள்? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. பெரும்பாலும் அவருக்குப் பதிலாக ஆப்கானிஸ்தானின் அஸ்மத்துல்லா உமர்சாய் அணியில் இடம் பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் அவர் மித வேகப்பந்து வீச்சாளர். இதனால் லொக்கி ஃபெர்குசனுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் வைசாக் விஜய்குமார் அணியில் இடம்பிடிக்கலாம் என ஐபிஎல் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<