அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலக உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 4 முதல் 6 மாதங்கள் வரை பும்ரா விளையாட முடியாது என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்குப் பிறகு, முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் தொடர்ந்து இந்திய தேசிய அகடமியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அண்மையில் நிறைவடைந்த ஆசியக் கிண்ணத் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.
- இந்திய அணியிலிருந்து வெளியேறும் அனுபவ வீரர்!
- இந்திய T20i அணியில் மூன்று வீரர்கள் இணைப்பு
- T20i கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய சூர்யகுமார் யாதவ்
இதனிடையே, பும்ரா காயத்திலிருந்து பூரண குணமடைந்ததால் கடந்த செப்டம்பர் 12ஆம் திகதி வெளியிடப்பட்ட T20 உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் பும்ரா இடம்பெற்றார். மேலும் T20 உலகக் கிண்ணத்துக்கு முன்னர் நடைபெறும் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுடனான T20i தொடர்களிலும் அவர் இடம்பெற்றார்.
எவ்வாறாயினும், அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது T20i போட்டியில் அவர் விளையாடவிவில்லை. இரண்டாவது மற்றும் மூன்றாவது T20i போட்டியில் விளையாடினார். மூன்றாவது T20i போட்டியில் 4 ஓவர்களில் 52 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து மிகவும் மோசமாக பந்துவீசியிருந்தார்.
இது இவ்வாறிருக்க, அவுஸ்திரேலியா தொடர் நிறைவடைந்த உடன் இந்திய அணி தற்போது தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான T20i தொடரில் விளையாடி வருகிறது. திருவனந்தபுரத்தில் நேற்று (28) நடைபெற்ற முதலாவது T20i போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றயீட்டியது.
இந்த நிலையில், குறித்த போட்டிக்கான வலைப் பயிற்சியின்போது முதுகுப்பகுதியில் அசௌகரியமாக உணருவதாக மருத்துவக் குழுவிடம் பும்ரா தெரிவித்துள்ளார். இதனையடுத்து முதல் போட்டியில் அவர் விளையாடவில்லை.
தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த பும்ராவை பரிசோதித்த மருத்துவர்கள் பும்ராவுக்கு 2 மாத காலம் ஓய்வு தேவை என அறிவுறுத்தி இருக்கிறார்கள். அத்துடன், இதற்கு அறுவை சிகிச்சையும் பரிந்துரைக்கப்படலாம் என்ற தகவலை பிசிசிஐ தரப்பிற்கு தெரிவித்தனர்.
‘அவரது காயம் தீவிரமாக இருப்பதால் அவர் இந்திய அணியுடன் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல மாட்டார் என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக்குழு விரைவில் இதுகுறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்.’ என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் அனுபவ சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக T20 உலகக் கிண்ணத்தில் இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது ஜஸ்பிரித் பும்ராவும் விலகுவது இந்திய அணிக்கு மிகப் பெரிய பின்னடைவைக் கொடுக்கவுள்ளது.
ஒருவேளை பும்ரா T20 உலக கோப்பையில் பங்கேற்கவில்லை என்றால் அவருக்குப் பதிலாக மேலதிக வீரர்களாக அறிவிக்கப்பட்ட மொஹமட் ஷமி அல்லது தீபக் சாஹர் இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<