இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு பதக்கமொன்றைப் பெற்றுக்கொடுக்கின்ற முக்கிய வீரர்களுள் ஒருவரும், மத்திய தூர ஓட்டப் போட்டிகளில் தேசிய சாதனைக்குச் சொந்தக்காரருமாகிய இந்துனில் ஹேரத், கென்யாவில் இடம்பெற்ற ஜனாதிபதி கிண்ணத்துக்கான மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்குகொண்டு ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இலங்கை சாதனையை முறியடித்தார்.
நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் பங்கேற்றிருந்த இந்துனில் ஹேரத், போட்டியை ஒரு நிமிடமும் 47.13 செக்கன்களில் ஓடி முடித்தே இந்த புதிய சாதனையை நிலைநாட்டியிருக்கின்றார்.
இலங்கை – மேற்கிந்திய தீவுகள் போட்டியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சை
முன்னதாக 1993 ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் ரஞ்சித் சுபசிங்க, ஒரு நிமிடமும் 47.56 செக்கன்களில் ஓடி முடித்து நிலைநாட்டிய சாதனையை 25 வருடங்களுக்குப் பிறகு இந்துனில் ஹேரத் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, இந்துனில் ஹேரத்தின் இந்த நேரப் பெறுமதியானது ஆசியாவில் 6 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், முன்னதாக 2014 ஆம் ஆண்டு ஒரு நிமிடமும் 48.69 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து தனது தனிப்பட்ட அதிசிறந்த காலத்தையும் அவர் பதிவு செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சம்பியன்ஷிப் மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் அவர் 5 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.
இதேநேரம், கடந்த வருடம் முழுவதும் குறித்த போட்டிப் பிரிவில் அதீத திறமைகளை வெளிப்படுத்தி வந்த அவர், இறுதியாக துர்க்மெனிஸ்தானில் நடைபெற்ற ஆசிய உள்ளக மற்றும் தற்காப்புக் கலை விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 800 மீற்றரில் புதிய தேசிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.
அதுமாத்திரமின்றி, குறித்த போட்டியில் தகுதிகாண், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் என மூன்று தடவைகள் தேசிய சாதனையை இந்துனில் ஹேரத் முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவுக்கு அவர் தகுதி பெற்றிருந்தார். எனினும், இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு அதில் பங்கேற்காது இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரணையுடன் கடந்த ஏழு மாதங்களாக கென்யாவில் தங்கியிருந்து விசேட பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதன் பிரதிபலனாகவே இந்துனில் ஹேரத்துக்கு இந்தப் புதிய மைல்கல்லை எட்டமுடிந்தது.
ரொனால்டோவின் ஹெட்ரிக் கோலால் ஸ்பெயினுடனான போட்டியை சமன் செய்த போர்த்துக்கல்
வலள ஏ ரத்னாயக்க கல்லூரியின் பழைய மாணவரான இந்துனில் ஹேரத், டபிள்யூ. ரத்னகுமாரின் கீழ் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற அதேநேரம், அவரது வெளிநாட்டு பயிற்றுவிப்பாளராக கென்யாவைச் சேர்ந்த டன் முசோகியோ செயற்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் போட்டியின் பிறகு கென்யாவில் இருந்து இந்துனில் ஹேரத் கருத்து வெளியிடுகையில்,” உண்மையில் சுமார் 25 வருட கால இலங்கை சாதனையை முறியடிக்க கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கின்றது. இதற்கு நான் எனது பயிற்றுவிப்பாளர் ரத்னகுமாருக்கும், அதேபோன்று கென்யாவின் பயிற்றுவிப்பாளர் டன் முசோகியோவுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன், கென்யாவில் பயிற்சிபெற என்னை அனுப்பிவைத்த இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனவே எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு பதக்கமொன்றை பெற்றுக்கொடுப்பதே எனது அடுத்த இலக்காகும்” என அவர் தெரிவித்தார்.
>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<