இந்திய கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான சுனில் சேத்ரி சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்த நடப்பு வீரர்களின் பட்டியலில் அர்ஜென்டீனாவின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியை பின்தள்ளி 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பீபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் கத்தாரில் 2022இல் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ஆசிய பிராந்திய அணிகளை தெரிவு செய்யவும் 2023 ஆசியக் கிண்ண தொடருக்கான அணிகளைத் தெரிவு செய்வதற்குமான தகுதிகாண் சுற்றின் ஈ குழுவுக்கான போட்டிகள் கத்தாரில் நடைபெற்றது.
தென் கொரியாவுடன் 10 வீரர்களுடன் போராடிய இலங்கை கால்பந்து அணி
இதில் கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் உலக கால்பந்து தரவரிசையில் 105வது இடத்திலுள்ள இந்திய அணி, 184ஆவது இடத்தில் இருக்கும் பங்களாதேஷ் அணியை சந்தித்தது.
இந்தப் போட்டியில் 36 வயதான சுனில் சேத்ரி போட்ட 2 கோல்களின் உதவியுடன் பங்களாதேஷ் அணியை 2 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் இந்தியா வெற்றிகொண்டது.
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் இந்திய அணிக்கு கடந்த 6 வருடங்களில் கிடைத்த முதல் வெற்றியாகவும், வெளிநாட்டில் கடந்த 20 வருடங்களில் கிடைத்த முதல் வெற்றியாகவும் இது அமைந்தது.
இதனிடையே, பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் சுனில் சேத்ரி 2 கோல்கள் அடித்ததன் மூலம் உலக அளவில் அதிக கோல் அடித்த நடப்பு வீரர்கள் பட்டியலில் ஒட்டுமொத்தமாக 72 கோல்களுடன் 2ஆம் இடத்தில் இருந்த அர்ஜெண்டீனாவின் லியோனல் மெஸ்ஸியை பின்தள்ளிவிட்டு, 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
Video – LALIGA கிண்ண மோதலில் இருந்து வெளியேறிய பார்சிலோனா!| FOOTBALL ULAGAM
இதேவேளை, லியோனல் மெஸ்ஸியுடன் தன்னை ஒப்பிடவேண்டாம் எனவும், தான் தொடர்ந்தும் அர்ஜன்டீனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸியின் பரம ரசிகனாக இருப்பதாகவும் இந்திய கால்பந்தாட்ட அணித் தலைவர் சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உலக அளவில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துக்கல் அணிக்காக 103 கோல்கள் அடித்து முதலிடத்தில் காணப்படுகின்றார்.
சுனில் சேத்ரி 2ஆவது இடத்தில் காணப்பட, 3ஆவது இடத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அலி மப்கூதுபும், 4ஆவது இடத்தில் அர்ஜன்டீனாவின் மெஸ்ஸியும் காணப்படுகின்றனர்.
மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க….