இந்திய அணி தமது அண்டை நாடான இலங்கைக்கு கடந்த ஜூலை மாத இறுதியில் இருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு T-20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி இருந்தது. இப்போட்டிகள் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று 9-0 என்கிற சாதனையுடன் இலங்கையை தோற்கடித்திருந்தது.
இந்திய அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் நிறைவடைந்து இரு வாரங்கள் மாத்திரமே ஆகின்ற நிலையில் இலங்கை அணியினை வீழ்த்த இந்தியா பயன்படுத்தியதாகக் கூறப்படும் உத்திகள் அடங்கிய துண்டுப்பிரசுரமொன்று கண்டெடுக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று வேகமாக பரவி வருகின்றது.
இந்திய அணி இலங்கையுடன் மோதிய தொடர் காலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியுடன் ஆரம்பமாகியிருந்தது. இப்போட்டியின் போது இந்திய அணிக்கு வழங்கப்பட்டிருந்த ஓய்வறையின் சுவரில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த துண்டுப்பிரசுரத்தில் இலங்கையின் துடுப்பாட்ட வீரர்களுக்கு எந்த வகையில் பந்து வீசலாம் என்பது பற்றிய குறிப்புக்கள் அடங்கியிருந்தன.
அதாவது இலங்கையின் திமுத் கருணாரத்ன, உப்புல் தரங்க, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், நிரோஷன் திக்வெல்ல, அசேல குணரத்ன, தனன்ஞய டி சில்வா மற்றும் தில்ருவான் பெரேரா ஆகிய வீரர்கள் சுழல் பந்துவீச்சுக்கு எவ்வாறு செயற்படுவார்கள், வேகப்பந்து வீச்சுக்கு எவ்வாறு செயற்படுவார்கள் என்பது பற்றி மிகவும் விபரமாகவும் நுணுக்கமாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த துண்டுப்பிரசுரம் இந்திய அணியினால் தான் உபயோகப்படுத்தப்பட்டதா? என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், இவ்வாறாக எதிரணியின் ஒவ்வொரு வீரர்கள் பற்றியும் ஆய்வு செய்து அதனடிப்படையில் செயற்படுவது என்பது சிறந்த போட்டி உத்திகளில் ஒன்றாகும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
காலியில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான போட்டியில், இந்தியா 304 ஓட்டங்களால் இலங்கையை வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Not sure this was supposed to be left lying around post-Test Galle Intl
மேலும் பல விளையாட்டு செய்திகளை அறிய