டோனியை முழுமையாக இழந்து மேற்கிந்திய தீவுகள் செல்லவுள்ள இந்திய அணி

461

ஐ.சி.சி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் அரையிறுதியுடன் வெளியேறிய இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அடுத்த தொடரில் விளையாடவுள்ளது. ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியானது அங்கு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடன் மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்கவுள்ளது. 

உலகக்கிண்ண முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி நியூஸிலாந்து அணியுடன் தோல்வியை தழுவி இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்திருந்தது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்றுவிப்பு குழாம் மீதும், இந்திய அணியின் தலைமை மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

திக்வெல்ல தலைமையில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிராக…

மஹேந்திர சிங் டோனியினுடைய ஓய்வு, விராட் கோஹ்லியை அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்கி விட்டு ரோஹித் சர்மாவை நியமிக்க வேண்டும், தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை என்றவாரெல்லாம் பல சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியினுடைய பயிற்றுவிப்பு குழாத்தினுடைய பதவிக்காலம் கடந்த உலகக்கிண்ண தொடருடன் நிறைவுக்கு வந்துள்ளது. 

அதன் பிரகாரம் தற்போது புதிய பயிற்றுவிப்பாளர்களுக்காக விண்ணப்பம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. குறுகிய காலப்பகுதிக்குள் மேற்கிந்திய தீவுகளுடனான தொடர் ஆரம்பமாகவுள்ளதனால் தற்போது இருக்கின்ற பயிற்றுவிப்பு குழாமானது மேற்கிந்திய தீவுகளுடனான தொடர் வரைக்கும் செயற்படுவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அனுமதி வழங்கியுள்ளது.  

இவ்வாறு பல நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையானது மேற்கிந்திய தீவுகளுடனான சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான குழாத்தினை கடந்த வெள்ளிக்கிழமை (19) அறிவிப்பதாக தெரிவித்திருந்தது. இருந்தும் இன்றைய தினமே (21) குறித்த சுற்றுப்பயணத்திற்கான குழாம் பல வித்தியாசமான மாற்றங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி மூவகையான தொடருக்கும் அணியின் தலைவராக விராட் கோஹ்லி பெயரிடப்பட்டுள்ளார். கடந்த உலகக்கிண்ண தொடரின் போது உபாதைக்குள்ளாகிய ஹார்டிக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ராவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. 

இரண்டு வாரகால ஓய்வுக்கு அனுமதி கோரியிருந்த விக்கெட் காப்பாளரான எம்.எஸ் டோனிக்கு மேற்கிந்திய தீவுகளுடனான மூவகையான தொடர்களிலும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை உபாதை காரணமாக உலகக்கிண்ண தொடரின் இடைநடுவில் வெளியேறிய ஷிகர் தவானுக்கு ஒருநாள் மற்றும் டி20 குழாமில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் போட்டியின் போது உபாதைக்குள்ளாகிய விக்கெட் காப்பாளர் ரித்திமன் ஷாஹா ஒன்றரை வருடங்களின் பின்னர் மீண்டும் டெஸ்ட் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார். அத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டுவரும் சுழல் பந்துவீச்சாளரான ரவி அஷ்வின் டெஸ்ட் குழாமில் மாத்திரம் இடம்பெற்றுள்ளார்.

இலங்கை தொடரில் அணித் தலைவரை இழந்தது பங்களாதேஷ்

பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபீ மொர்டஷா தொடை தசைப்பிடிப்பு உபாதை…

டி20 தொடருக்கான குழாம்

சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான மூன்று போட்டிகளை கொண்ட டி20 சர்வதேச தொடரானது அடுத்த மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் ஐக்கிய அமெரிக்காவின் ப்ளோரிடாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்காக 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய குழாமில் ரோஹித் சர்மா (உப தலைவர்), ஷிகர் தவான், கே.எல் ராகுல், சிரேயஷ் ஐயர், மணீஸ் பாண்டி, ரிஷப் பண்ட், குர்ணல் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வொஷிங்டன் சுந்தர், ராகுல் சஹார், புவ்னேஸ்வர் குமார், கலீல் அஹமட், தீபக் சஹார், நவ்தீப் ஷைனி

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான குழாம்

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய ஒருநாள் குழாமில் ரோஹித் சர்மா (உப தலைவர்), ஷிகர் தவான், கே.எல் ராகுல், சிரேயஷ் ஐயர், மணீஸ் பாண்டி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், கேதார் ஜாதவ், மொஹமட் ஷமி, புவ்னேஸ்வர் குமார், கலீல் அஹமட், நவ்தீப் ஷைனி

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான குழாம்

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய டெஸ்ட் குழாமில் அஜிங்கியா ரஹானே (உப தலைவர்), மயங்க் அகர்வால், கே.எல் ராகுல், செடீஸ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், ரித்திமன் ஷாஹா, ரவி அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாண்ட் சர்மா, மொஹமட் ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா, உமேஷ் யாதவ்

தொடர் அட்டவணை

  • 3 ஆகஸ்ட் – முதலாவது டி20 சர்வதேச போட்டி – புளோரிடா
  • 4 ஆகஸ்ட் – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி – புளோரிடா 
  • 6 ஆகஸ்ட் – மூன்றாவது டி20 சர்வதேச போட்டி – கயானா
  • 8 ஆகஸ்ட் – முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி – கயானா
  • 11 ஆகஸ்ட் – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி – ட்ரினிடாட்
  • 14 ஆகஸ்ட் – மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி – ட்ரினிடாட்
  • 22 – 26 ஆகஸ்ட் – முதலாவது டெஸ்ட் போட்டி – அண்டிகுவா
  • 30 ஆகஸ்ட் – 3 செப்டம்பர் – இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஜமேய்க்கா

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<