அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று (05) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதமடித்த விராட் கோஹ்லி ஒரு போட்டியிலேயே பல்வேறு சாதனைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அங்கு இந்திய கிரிக்கெட் அணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டியில் விளையாடி வருகின்றது.
கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா
இருதரப்பு தொடரின் முதல் தொடரான டி20 தொடரில் இந்திய அணியை அவர்களது சொந்த மண்ணிலேயே வைத்து தேற்கடித்து அவுஸ்திரேலிய அணி 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்தது. டி20 தொடரை இழந்த இந்திய அணி ஒருநாள் தொடரை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் ஒருநாள் தொடரில் களமிறங்கியது.
5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது கடந்த சனிக்கிழமை (02) ஆரம்பமானது. முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று (05) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ஓட்டங்களினால் த்ரில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.
நேற்று (05) நடைபெற்றிருந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 250 ஓட்டங்களுக்கு சுருண்டு போனது. இருந்தாலும் அவ்வணிக்காக தனித்து நின்று போராடிய அணித்தலைவர் விராட் கோஹ்லி சதமடித்து மொத்தமாக 116 ஓட்டங்களை குவித்திருந்தார்.
இந்த சதத்தின் மூலமாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி ஒரு போட்டியிலேயே இரண்டு சாதனைகளுக்கு சொந்தக்காரராகவும், பல சாதனைகளின் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.
ஒரு போட்டியில் விராட் கோஹ்லியினால் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்.
- குறித்த போட்டியில் விராட் கோஹ்லி அணித்தலைவராக 9,000 ஓட்டங்களை கடந்திருந்தார். இதன் மூலம் ஒரு அணித்தலைவராக விரைவாக 9,000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார். இதற்கு முன்னர் ஆஸி. அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் 204 இன்னிங்சுகளில் 9,000 ஓட்டங்களை கடந்திருந்தார். தற்போது கோஹ்லி 159 இன்னிங்சுகளில் கடந்து முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும், ரிக்கி பொண்டிங் (அவுஸ்திரேலியா), மஹேந்திர சிங் டோனி (இந்தியா) ஆகியோர் அணித்தலைவர்களாக 9,000 ஓட்டங்களை கடந்துள்ளனர். தற்போது விராட் கோஹ்லி மூன்றாவது வீரராக இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
- நேற்று (05) நடைபெற்ற போட்டியானது இந்தியாவின் நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இந்த போட்டியில் விராட் கோஹ்லி 60 ஓட்டங்களை கடந்த போது இம்மைதானத்தில் அதிக ஒருநாள் ஓட்டங்களை குவித்த துடுபாட்ட வீரராக காணப்பட்ட இந்திய அணி வீரர் மஹேந்திர சிங் டோனியை பின்தள்ளி முதலிடம் பிடித்தார்.
மேற்கிந்திய தீவுகளுடனான டி20 தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இங்கிலாந்து
தற்போது விராட் கோஹ்லி அம்மைதானத்தில் 325 ஓட்டங்களையும், மஹேந்திர சிங் டோனி 268 ஓட்டங்களையும், அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வொட்ஷன் 183 ஓட்டங்களையும் குவித்துள்ளனர்.
- நேற்றைய சதத்தின் மூலம் விராட் கோஹ்லி ஒருநாள் அரங்கில் 40 சதங்களை பூர்த்தி செய்தார். அதன் மூலம் அதிக ஒருநாள் சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 49 சதங்களுடன் முதலிடத்தில் காணப்படும் சச்சின் டெண்டுல்காருடன் சேர்ந்து 40 சதங்களுக்கு மேல் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது வீரராக இடம்பெற்றுள்ளார்.
குறித்த பட்டியலில் இலங்கை அணி வீரர் சனத் ஜயசூரிய 28 ஒருநாள் சதங்களுடன் நான்காமிடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
04. நேற்றைய போட்டியில் விராட் கோஹ்லி 10 பௌண்டரிகளை விளாசியிருந்தார். இதன் மூலம் ஒருநாள் அரங்கில் 1,000 பௌண்டரிகளை கடந்த 12ஆவது வீரராக குறித்த பட்டியலில் இடம்பிடித்ததுடன், இந்திய வீரர்கள் வரிசையில் 4ஆவது வீரராகவும் இடம்பிடித்திருந்தார். குறித்த பட்டியலில் 2,016 பௌண்டரிகளை இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் காணப்படுகின்றார்.
- அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று பெற்ற சதத்தின் மூலம் அவ்வணிக்கு எதிராக 7 சதங்களை விளாசியிருந்தார். இதன் மூலம் மூன்று நாடுகளுக்கு எதிராக 7 சதஙகளுக்கு மேல் பெற்ற வீரர் என்ற பெருமையையும் விராட் கோஹ்லி படைத்திருந்தார். இதில் இலங்கை அணிக்கு எதிராக 8 சதங்களையும், மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக 7 சதங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- நேற்றைய சதத்துடன் ஒட்டுமொத்த சர்வதேச அரங்கில் (டெஸ்ட், ஒருநாள், டி20) 65 சதங்களை பெற்று குறித்த பட்டியலில் மூன்றாமிடத்தில் காணப்படுகின்றார். முதலிடத்தில் 100 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் காணப்படுகின்றார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<