இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி நேற்று (1) நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டி 3-1 என ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
2-1 என ஒருநாள் தொடரில் முன்னிலை பெற்ற இந்திய அணி
இன்று (29) மும்பையில் நடைபெற்ற இந்தியா மற்றும் ….
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியதீவுகள் அணி, இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சின் காரணமாக 31.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் 25 ஓட்டங்களையும் மார்லன் சமுவெல்ஸ் 24 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். ஏனைய வீரர்கள் மிகவும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். சிறப்பாக பந்து வீசிய ரவீந்தர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் கலீல் அஹமட் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
ஒருநாள் தொடரை கைப்பற்றுவதற்கு இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய நிலையில் மிக இலகுவான இலக்கான 105 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி 6 ஓட்டங்கள் பெற்றிருந்த போது ஷிகர் தவான் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். பின்னர் கைகோர்த்த ரோகித் ஷர்மா மற்றும் அணித்தலைவர் விராட் கோஹ்லி ஆகியோர் பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 99 ஓட்டங்கள் பெற்றதன் மூலம் இந்திய அணி 14.5 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது.
இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் ரோகித் ஷர்மா 63 ஓட்டங்களையும் கோஹ்லி 33 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டனர். இந்திய அணியின் வீழ்த்தப்பட்ட ஒரு விக்கெட்டையும் ஒசேன் தோமஸ் கைப்பற்றியிருந்தார்.
இந்திய வீரர் கலீல் அஹமட்டுக்கு எச்சரிக்கை விடுத்த ஐசிசி
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ….
இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக ரவீந்தர ஜடேஜா தெரிவு செய்யப்பட்டிருந்ததோடு தொடரின் நாயகனாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவு செய்யப்பட்டார். இரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகளை கொண்ட சர்வதேச டி20 தொடர் எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
மேற்கிந்திய தீவுகள் அணி – 104 (31.5) – ஹோல்டர் 25, சமுவெல்ஸ் 24, ஜடேஜா 34/4, பும்ரா 11/2, கலீல் 29/2
இந்தியா அணி – 105/1 (14.5) – ரோகித் ஷர்மா 63*, கோஹ்லி 33*, தோமஸ் 33/1
முடிவு : இந்திய அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி.