இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என பறிகொடுத்தது.

இதன்படி இந்திய அணி நான்கு நாட்களுக்குள் இலங்கையுடனான டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. இலங்கை அணி இந்தியாவை டெஸ்ட் தொடர் ஒன்றில் வீழ்த்தி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிறது.

கொழும்பு, SSC மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இரண்டாவது இன்னிங்சுக்கு பலோ ஓன் (Follow on) செய்த இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடியபோதும் ரவிந்திர ஜடேஜாவின் பந்துவீச்சுக்கு முன் அந்த முயற்சி பலன் தரவில்லை.

ஆட்டத்தின் நான்காவது நாளான இன்று 202 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையிலேயே இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. எனினும் இலங்கை இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 230 ஓட்டங்களை பெற வேண்டிய நெருக்கடியிலேயே நான்காவது நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.

கடந்த வியாழக்கிழமை (03) ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் சிடேஷ்வர் புஜாரா (133) மற்றும் அஜிங்கியா ரஹானேவின் (132) சதத்தின் உதவியோடு இந்திய அணி முதல் இன்னிங்சுக்காக 622 ஓட்டங்களை குவித்தது. எனினும் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 183 ஓட்டங்களுக்கே சுருண்டதால் மீண்டும் இரண்டாவது இன்னிங்சுக்கு பலோ ஓன் (Follow on) செய்ய வேண்டி ஏற்பட்டது.

இந்திய தொடரிலிருந்து வெளியேறினார் நுவன் பிரதீப்

இந்திய தொடரிலிருந்து வெளியேறினார் நுவன் பிரதீப்

இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 81ஆவது ஓவரை வீசும்போது இடது

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மூன்றாவது நாள் ஆட்டத்தில் குசல் மெண்டிஸ் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன இரண்டாவது விக்கெட்டுக்கு பெற்ற 191 ஓட்ட இணைப்பாட்டமானது இலங்கை அணிக்கு நம்பிக்கை தருவதாக இருந்தது. மெண்டிஸ் 110 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

கருணாரத்ன 6ஆவது சதம்

இந்நிலையில் 92 ஓட்டங்களுடன் நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த கருணாரத்ன தனது 6ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். அதில் நான்கு சதங்கள் இரண்டாவது இன்னிங்சுக்காக பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்றாவது இன்னிங்ஸில் அதிக சதங்கள் பெற்றவர் கருணாரத்ன ஆவார். வேறு எந்த துடுப்பாட்ட வீரரும் இரண்டு சதங்களுக்கு மேல் பெற்றதில்லை. இலங்கை அணியில் குசல் மெண்டிஸ் மற்றும் தினேஷ் சந்திமால் இருவரும் இவ்வாறான மூன்று சதங்களை கடந்த மூன்று ஆண்டுகளில் பெற்றுள்ளனர்.

எனினும் கருணாரத்னவுடன் இன்றைய தினம் ஆட்டத்தை ஆரம்பித்த மலிந்த புஷ்பகுமாரவால் தொடர்ந்து தனது விக்கெட்டை காத்துகொள்ள முடியவில்லை. 99 முதல்தர போட்டிகளில் விளையாடி இருந்தாலும் 30 வயதான புஷ்பகுமாரவுக்கு இது கன்னி டெஸ்ட் போட்டியாகும். நைட் வொட்ச்மனாக (Night watchman) களமிறங்கிய அவர் 58 பந்துகளுக்கு முகம்கொடுத்த நிலையில் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

விக்கெட் அள்ளிய ஜடேஜா

அடுத்து வந்த அணித்தலைவர் சந்திமால் 6 பந்துகளுக்கு 2 ஓட்டங்களை பெற்றிருந்தபோது ஜடேஜாவின் பந்துக்கு முதலாவது ஸ்லிப்பில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த ரஹானேவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் தனது விக்கெட் வீழ்த்தும் படலத்தை ஆரம்பித்த ஜடேஜா அடுத்தடுத்து விக்கெட்டுகளை சாய்த்தார். ஒருமுனையில் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த கருணாரத்ன ஜடேஜாவின் தந்திரமான வேகப்பந்தில் மாட்டிக் கொண்டார். பந்தை தடுத்து ஆட முயன்போது கருணாரத்னவின் கையுறையின் மணிக்கட்டு பகுதியில் பட்ட பந்து ஸ்லிப் திசையில் இருந்த ரஹானேவிடம் சென்றபோதும் அதனை அவர் நிலத்தில் பட்டும்படாமலும் பிடியெடுத்தார்.

307 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 16 பவுண்டரிகளுடன் 141 ஓட்டங்கைளை பெற்ற நிலையில் ஆட்டமிழந்து வெளியேறியபோதும் இலங்கையின் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கும் எதிர்பார்ப்பும் பறிபோனது.

முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல நல்ல ஆரம்பத்தை பெற்றபோதும் இருவரும் தொடர்ந்து தனது ஓட்டங்களை அதிகரித்துக்கொள்ள முடியாமல்போனது. மெதிவ்ஸ் 36 ஓட்டங்களுடனும் திக்வெல்ல 31 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

கடைசியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடிய இலங்கை அணி தசைப்பிடிப்பு காயத்திற்கு உள்ளாகி தொடரில் இருந்து வெளியேறி இருக்கும் நுவன் பிரதீப்பையும் களமிறக்கி கௌரவத்தை காத்துக்கொள்ள போராடியது. ஆனால் பிரதீப் அஷ்வினின் பந்துக்கு ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

கடைசியில் இலங்கை அணி 116.5 ஓவர்களில் 386 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. எவ்வாறாயினும் பலோ ஓன் செய்த நிலையில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சுக்காக பெற்ற நான்காவது அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும்.

ஜடேஜா, அஷ்வின் அரிய சாதனை

இந்தியா சார்பில் ஜடேஜா 39 ஓவர்கள் பந்துவீசி 152 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஷ்வின் மற்றும் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 9ஆவது தடவையாகும்.

இதே டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் அஷ்வினும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருவரும் இந்த டெஸ்டில் அரைச்சதமும் பெற்றனர். இதற்கு முன்னர் டெஸ்ட் வரலாற்றி இவ்வாறு இரண்டு தடவைகளே நிகழ்ந்துள்ளன. 1895 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் ஜோர்ஜ் கிப்பன் மற்றும் அல்பர்ட் டிரோட் மற்றும் 2011இல் இங்கிலாந்தின் ஸ்டுவட் பிரோட் மற்றும் டிம் பிரஸ்னன் ஆகியோர் இந்த அரிதான சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

தொடர்ந்து 8ஆவது தொடர் வெற்றி

இந்த வெற்றியுடன் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றிய இந்திய அணி தொடர்ச்சியாக 8ஆவது டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்றுள்ளது. 2015ஆம் ஆண்டு டெஸ்ட் தொடர் வெற்றியை இலங்கை சுற்றுப்பயணத்துடன் ஆரம்பித்த இந்திய அணி தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், நியூஸிலாந்து, இங்கிலாந்து, பங்களாதேஷ், அவுஸ்தேரியா தற்போது இலங்கையை மீண்டும் ஒருமுறை வீழ்த்தியுள்ளது. இதனை விடவும் 2005 தொடக்கம் 2008 வரை அவுஸ்திரேலிய அணியே அதிகபட்சம் 9 டெஸ்ட் தொடர்களில் அடுத்தடுத்து வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் இலங்கை அணி 2000ஆம் ஆண்டுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக காலி மைதானத்தில் இன்னிங்ஸால் தோற்ற பின் சொந்த மண்ணில் இன்னிங்ஸ் தோல்வி அடைவது இது முதல் முறையாகும். எவ்வாறாயினும் இலங்கை சொந்த மண்ணில் ஏழு தடவைகள் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்துள்ளது.

எனினும் இந்திய அணி இலங்கை மண்ணில் இன்னிங்ஸ் வெற்றி பெறுவது இது முதல்முறையாகும். எனினும் இது இலங்கைக்கு எதிராக இந்தியாவின் எட்டாவது டெஸ்ட் வெற்றி என்பதோடு இதில் நான்கில் தொடர்ந்து வென்றுள்ளது.

இந்திய அணிக்காக பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் இரண்டிலும் பிரகாசித்த ஜடேஜாவுக்கு போட்டியின் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (12) பல்லேகலே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே தொடரை இழந்திருக்கும் இலங்கை அணி தனது கௌரவத்தை காத்துக்கொள்வதற்காக இந்த போட்டியில் போராடும் என்று எதிர்பார்க்கலாம்.

SCORECARD