நடபெற்று முடிந்திருக்கும் சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகள் இடையிலான ஒரு நாள் தொடரின் இரண்டாவது போட்டியில், இந்தியா இலங்கையை 141 ஓட்டங்களால் வீழ்த்தி இருப்பதுடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் 1-1 என சமப்படுத்தியிருக்கின்றது.
முன்னதாக மொஹாலியின் பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் திசர பெரேரா களத்தடுப்பினை தேர்வு செய்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) தராம்சலாவில் நடைபெற்று முடிந்த இத்தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று ஒரு நாள் போட்டிகளில் தமது தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருந்தது. அதோடு இந்திய மண்ணில் இருதரப்பு ஒரு நாள் தொடரொன்றை இதுவரை இலங்கை அணி கைப்பற்றாத காரணத்தினால் அந்த வரலாற்றுப் பதிவினை மேற்கொள்ளும் நோக்கோடு இந்தப் போட்டியில் விளையாட இலங்கை தயாராகியது.
இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாமல் இருக்க ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தமிழகத்தினை சேர்ந்த 18 வயதேயான சுழல்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தரினை குல்தீப் யாதவ்வுக்கு பதிலாக அறிமுகம் செய்திருந்தது.
தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக இந்திய அணியினர் ரோஹித் சர்மா மற்றும் சிக்கர் தவான் ஆகியோருடன் தமது துடுப்பாட்டத்தினை தொடங்கினர். இரண்டு வீரர்களும் அதிரடி கலந்த நிதானத்தோடு இந்தியாவுக்கு சிறப்பான ஆரம்பம் ஒன்றுக்கு அத்திவாரமிட்டனர். முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 115 ஓட்டங்கள் பகிரப்பட்ட நிலையில் ஆரம்ப வீரரான தவான் அரைச்சதம் கடந்து ஆட்டமிழந்தார்.
இந்தியாவின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்த சிக்கர் தவான் தனது 23ஆவது ஒரு நாள் அரைச் சதத்துடன் மொத்தமாக 67 பந்துகளில் 9 பெளண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களினைக் குவித்திருந்தார்.
எனினும் இரண்டாம் விக்கெட்டுக்காக புதிய துடுப்பாட்ட வீரரான ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா மெதுவான முறையில் ஒரு சிறந்த இணைப்பாட்டத்துக்கு வித்திட்டு, பிறகு அதிரடி காட்டத்தொடங்கி தனது 16 ஆவது ஒரு நாள் சதத்தினை கடந்தார்.
இந்திய அணி இதனால் 300 ஓட்டங்களை இலகுவாக கடந்தது. சர்மா, ஐயர் ஆகியோரினால் இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக அதிவலுவான 213 ஓட்டங்கள் பகிரப்பட போது இந்திய அணியின் மூன்றாம் விக்கெட் வீழ்ந்தது.
இந்திய அணியின் மூன்றாம் விக்கெட்டாக ஓய்வறை நடந்த ஸ்ரேயாஸ் ஐயர் தனது கன்னி ஒரு நாள் அரைச் சதத்துடன் மொத்தமாக 70 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பெளண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 88 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.
தொடர்ந்தும் இந்திய அணித் தலைவரான ரோஹித் சர்மா அதிரடியுடன் இலங்கைப் பந்து வீச்சாளர்களை நிர்மூலம் செய்து இரட்டைச் சதம் கடந்தார். இவரின் இந்த அபார துடுப்பாட்டத்தின் துணையோடு இந்தியா 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 392 ஓட்டங்களினைப் பெற்றுக் கொண்டது.
ஒரு நாள் போட்டிகளில் இன்றைய அபார ஆட்டம் மூலம் மூன்றாவது தடவையாக இரட்டைச் சதம் கடந்து உலக சாதனை செய்த ரோஹித் சர்மா 153 பந்துகளில் 12 சிக்ஸர்கள் மற்றும் 12 பெளண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 208 ஓட்டங்களினை குவித்து ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார். இது சர்மா இலங்கை அணிக்கெதிராக ஒரு நாள் போட்டிகளில் பெற்ற இரண்டாவது இரட்டைச் சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு ஓட்டங்களை வாரிக்கொடுத்த இலங்கையின் பந்து வீச்சு சார்பாக அணித் தலைவர் திசர பெரேரா மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றி ஆறுதல் தந்திருந்தார். இதில் இந்தியாவுக்கு 106 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்த வேகப்பந்து வீச்சாளரான நுவான் பிரதீப் இலங்கை சார்பாக ஒரு நாள் போட்டிகள் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் எதிரணிக்கு விட்டுத்தந்த வீரராக பதிவானார்.
இதனையடுத்து கடும் சவால்கள் நிறைந்த 393 ஓட்டங்கள் என்கிற வெற்றி இலக்கினை 50 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி தமது முதல் விக்கெட்டாக 15 ஓட்டங்களினைப் பெற்றிருந்த போது உபுல் தரங்கவினை 7 ஓட்டங்களுடன் பறிகொடுத்தது. தரங்கவினை அடுத்து இன்னுமொரு ஆரம்ப வீரரான தனுஷ்க குணத்திலக்கவினை இலங்கை 16 ஓட்டங்களுடன் பறிகொடுத்தது. இதனையடுத்து, லஹிரு திரிமான்னவும் ஏமாற்றினார்.
எனினும் நிரோஷன் திக்வெல்ல (22) மற்றும் அசேல குணரத்ன (34) ஆகியோர் அஞ்செலோ மெதிவ்சுடன் சேர்ந்து சிறிது நேரம் இந்திய அணிக்கு அச்சுறுத்தல் தந்தனர். இவர்கள் இருவரினையும் இந்தியா ஓய்வறை அனுப்ப போட்டி முழுக்க இந்திய அணிக்கு சாதகமானது.
தொடர்ந்தும் இந்திய அணியின் ஆதிக்கம் ஆட்டத்தில் நீடிக்க 50 ஓவர்கள் நிறைவில் இலங்கை 8 விக்கெட்டுக்களை இழந்து 251 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அஞ்செலோ மெதிவ்ஸ் போராட்டத்தினை வெளிப்படுத்தி தனது 2ஆவது ஒரு நாள் சதத்துடன் மொத்தமாக 132 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 11 பெளண்டரிகள் அடங்கலாக 111 ஓட்டங்களினை குவித்து ஆட்டமிழக்காது நின்றார்.
அதோடு மெதிவ்ஸ் இப்போட்டியின் மூ
இந்திய அணியின் பந்து வீச்சில், யுஸ்வேந்திர சாஹல் 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ஜஸ்பிரிட் பும்ரா 2 விக்கெட்டுக்களையும், வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியா மற்றும் புவ்னேஸ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
போட்டியின் ஆட்ட நாயகன் விருது இரட்டைச் சதம் கடந்த இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
இரண்டு அணிகளுக்குமிடையிலான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (12) விசாகப்பட்டினத்தில் இடம்பெறும்.
போட்டியின் சுருக்கம்
போட்டி முடிவு – இந்தியா 141 ஓட்டங்களால் வெற்றி