இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை இழந்துள்ள இலங்கை அணி தொடர் முழுவதிலும் தோல்வி அடையும் நெருக்கடியை தவிர்க்கும் ஒரு கௌரவப் போராட்டத்திற்காக மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளது.
இலங்கை அணியை சகல துறைகளிலும் துவம்சம் செய்திருக்கும் இந்திய அணி அந்த ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ள கடைசி டெஸ்டிலும் விட்டுக் கொடுக்காமல் விளையாடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே, கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை (12) ஆரம்பமாகவிருக்கும் இலங்கை–இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி, தொடர் தீர்மானிக்கப்பட்ட நிலையிலும் அதிக எதிர்பார்ப்புகள் கொண்ட போட்டியாக மாறியுள்ளது.
இந்த தொடரில் இதுவரை நடந்த இரண்டு போட்டிகளையும் ஒப்பிடுகையில் இந்திய அணி துடுப்பாட்டம், பந்து வீச்சு இரண்டு துறைகளிலும் இலங்கையை விடவும் பல மடங்கு முன்னிலை வகிக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்திய அணி மூன்று இன்னிங்ஸ்களில் விளையாடி 1440 ஓட்டங்களை பெற்றிருக்கிறது. அதாவது விக்கெட் ஒன்றுக்கு சராசரியாக 65.45 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக ருமேஷ் ரத்னாயக்க
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக இலங்கை..
எனினும், இலங்கை அணி நான்கு இன்னிங்ஸ்களில் மொத்தம் 1,105 ஓட்டங்களையே பெற்றது. இதன்படி பார்த்தால் அந்த அணி விக்கெட் ஒன்றுக்கு சராசரியாக 27.67 ஓட்டங்களையே குவித்தது.
பந்து வீச்சிலும் இதே நிலை தான். விருந்தாளிகளான இந்தியா 1931 பந்துகளை வீசி இலங்கை அணியின் 40 விக்கெட்டுகளை வீழ்த்தியது. அதாவது இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய நான்கு இன்னிங்ஸ்களிலும் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இந்திய பந்து வீச்சாளர்கள் 40.27 பந்துகளுக்கு ஒரு விக்கெட் வீதம் வீழ்த்த தவறவில்லை.
மறுபக்கம் இலங்கை பந்து வீச்சாளர்கள் 2065 பந்துகளை எறிந்து 22 விக்கெட்டுகளையே வீழ்த்தியது. அதாவது இந்தியா துடுப்பெடுத்தாடிய மூன்று இன்னிங்ஸ்களில் ஒரு இன்னிங்ஸில் மாத்திரமே அந்த அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இலங்கையால் சுருட்ட முடிந்தது. இதற்கு இடையில் இலங்கை 93.86 பந்துகளுக்கு ஒரு விக்கெட் வீதமே வீழ்த்தியது.
இந்த தரவுகள் இரு அணிகளுக்கும் இடையில் காணப்படும் அதிக இடைவெளியை காட்டுகிறது.
இலங்கையின் மீளாத காயம்
இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான தோல்விகளை சந்தித்து சொந்த மண்ணில் தொடரையும் இழந்து நிர்க்கதியான நிலையிலேயே இலங்கை அணி பல்லேகல டெஸ்டில் களமிறங்குகிறது. இலங்கை அணியின் நான்கு வீரர்கள் காயங்களால் வெளியேறி இருப்பதும் அணிக்கு பெரும் பலவீனமாகும்.
அணியின் ஒரே நம்பிக்கையாக இருக்கும் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்திற்கு முதுகுவலி பிரச்சினையால் கடைசி டெஸ்டில் ஓய்வு வழங்கப்படுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் கொழும்பு டெஸ்டில் 17.4 ஓவர்கள் மாத்திரம் வீசிய நிலையில் தசைப்பிடிப்பு காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். சகலதுறை வீரர் அசேல குணரத்ன ஏற்கனவே தொடரின் ஆரம்பத்திலேயே அணியில் இருந்து வெளியேறிவிட்டார். மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மாலும் தனது முதுகுப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் உபாதையால் தொடரில் விளையாட முடியாமல் இருக்கின்றார்.
இலங்கை அணிக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வீரர்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியே புதிய போட்டி உத்திகளுடன் களமிறங்கவேண்டி ஏற்பட்டுள்ளது.
இதன்படி வேகப்பந்து வீச்சாளர்களான துஷ்மன்த ஷமீர மற்றும் லஹிரு கமகே புதிதாக 15 பேர் குழாமில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். மணிக்கு 140 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசும் திறன் கொண்ட சமீர அணிக்கு அழைக்கப்பட்டிருப்பது இலங்கை மூன்றாவது டெஸ்டில் வேகப்பந்து வீச்சு மீது அதிக நாட்டம் கொண்டிருப்பதை வெளிக்காட்டுகின்றது.
இலங்கை அணி இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் மூன்றாவது டெஸ்டில் களமிறங்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும் நிலையிலேயே டெஸ்ட் போட்டி அனுபவம் இல்லாத கமகே மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை குழாமில் ஏற்கனவே லஹிரு குமார மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகிய இரு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
இலங்கையுடனான மூன்றாவது டெஸ்ட்டிற்கு இந்திய அணியில் புதிய வீரர்
இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவின்திர ஜடேஜாவுக்கு சர்வதேச….
மறுபக்கம் ரங்கன ஹேரத் இல்லாத நிலையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சில் யார், முன்னின்று செயற்படப்போகிறார்கள் என்ற பெரும் கேள்வி எழுந்திருக்கிறது. டில்ருவன் பெரேரா மற்றும் மலின்த புஷ்பகுமாரவுடன், புதிர் பந்துகளை வீசும் சைனமன் பந்துவீச்சாளர் லக்ஷான் சன்தகனும் இலங்கை குழாமில் சுழற்பந்து வீச்சாளராக உள்ளனர். SSC போட்டியில் தனது கன்னி ஆட்டத்தில் ஆடிய புஷ்பகுமார குறிப்பிடும்படியாக ஆடவில்லை.
இந்நிலையில் இலங்கை பதினொருவர் குழாமில் இடம்பெறப்போகும் சுழற்பந்து வீச்சாளர்கள் குறித்து ஆடுகளத்தை பொறுத்தே மாற்றங்கள் கொண்டுவர வாய்ப்புகள் அதிகம்.
கடந்த ஜூனில் இடம்பெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறிய இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹாம் போர்ட் தனது ஒப்பந்தத்தின் பாதியில் விலகியதில் இருந்து இலங்கை அணி சிக்கலை சந்தித்து வருகின்றது.
இதனை அடுத்து நடந்த ஜிம்பாப்வேக்கு எதிராக சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்ததால் அணியின் மனநிலை மேலும் பலவீனம் அடைந்தது. இப்போதைய நிலையில் இலங்கை அணிக்கு ஒரு திருப்புமுனையான வெற்றியே தேவைப்படுகிறது. அந்த வெற்றியை பல்லேகல டெஸ்டில் பெற அணித்தலைவர் சந்திமால் எதிர்பார்க்கிறார்.
“உண்மையில் இதுபோன்ற அணி ஒன்றை (இந்தியா) எம்மால் ஒரு போட்டியில் வெல்ல முடியுமாக இருந்தால் அணியில் மனநிலையை உயர்த்த முடியுமாக இருக்கும். அவர்கள் உலகின் முதல்நிலை அணியாகும்” என்கிறார் சந்திமால்.
எனினும் நாளைய போட்டியில் நீண்ட நாட்களின் பின்னர் லஹிரு திரிமான்ன மத்திய தர வரிசைக்காக அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அது போன்றே விஷ்வ பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் பந்து வீச்சு துறைக்காக அணியில் இணைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
எதிர்பார்க்கப்படும் இலங்கை குழாம்
தினேஷ் சந்திமால், திமுத் கருணாரத்ன, உபுல் தரங்க, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், நிரோஷன் திக்வெல்ல (வி.கா), லஹிரு திரிமான்ன, டில்ருவன் பெரேரா, மலின்த புஷ்பகுமார, லஹிரு குமா, விஷ்வ பெர்னாண்டோ
பாதகங்களில் சில சாதகங்கள்
இலங்கை அணி கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சரிவர சோபிக்காதபோதும் அணியின் ஆங்காங்கே பதிவான திறமைகளை கச்சிதமாக பயன்படுத்தினால் கடைசி டெஸ்டில் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க போதுமாக இருக்கும். குறிப்பாக SSC தோல்வியை தவிர்க்க இரண்டாது இன்னிங்ஸில் இலங்கை அணி எந்த நெருக்கடியும் இல்லாமல் ஓட்டங்களை குவித்த பாணி ஒரு சாதகமான அம்சமாகும்.
இந்த டெஸ்ட் தொடரில் தனித்து விளங்கிய துடுப்பாட்ட வீரராக ஆரம்ப வீரர் திமுத் கருணாரத்னவை குறிப்பிடலாம். காலி டெஸ்டின் நான்காவது இன்னிங்ஸில் 97 ஓட்டங்களை பெற்ற அவர் இரண்டாவது டெஸ்டிலும் நெருக்கடியான நேரத்தில் 141 ஓட்டங்களை குவித்தார்.
இந்த தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர்கள் வரிசையில் 265 ஓட்டங்களுடன் கருணாரத்ன இரண்டாவது இடத்தில் காணப்படுகிறார். அவரது ஓட்ட சராசரி கூட 66.25 என ஆரோக்கியமாகவே உள்ளது. அதிக நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக அடுவதே கருணாரத்னவின் சிறப்பம்சம். எனவே, கடைசி டெஸ்டில் கருணாரத்ன தனது தேவையை உணர்ந்து ஆடுவார் என்பதே இலங்கை அணியின் எதிர்பார்ப்பு.
அதேபோன்று, இளம் வீரர் குசல் மெண்டிஸ் கொழும்பு டெஸ்டில் எது பற்றியும் கவலைப்படாமல் பந்துகளை விளாசி பெற்ற சதம் அவரை அனைவரும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. இதன்போது அவரது துடுப்பாட்டத்தில் ரிவர்ஸ் ஸ்விப் போன்ற துணிச்சலாக அடித்தாடும் பாணியையும் காண முடிந்தது. பல்லேகலயிலும் இதே பாணியை கடைபிடித்தால் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியுமாக இருக்கும்.
இந்தியாவுடனான இறுதி டெஸ்டில் இருந்து ஹேரத் விலகினார்
இலங்கை டெஸ்ட் அணியின் அனுபவமிக்க இடதுகை சுழற்பந்து வீச்சாளரான..
நடந்து முடிந்த இரண்டு டெஸ்டுகளிலும் முன்னாள் அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் மேலோட்டமாக பார்த்தால் சோபிக்கவில்லை என்றபோதும் அவரது துடுப்பாட்டத்தில் சில சாதகமான பண்புகளை பார்க்க முடிகிறது.
காலி டெஸ்டில் 83 ஓட்டங்கள் பெற்ற மெதிவ்ஸ், கொழும்பில் ஜடேஜாவின் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸர்களை விளாசியது அவரது துப்பாட்ட திறமை இன்னும் மழுங்கவில்லை என்பதை காட்டுகிறது. மறுமுனையில் சரியான உதவி கிடைத்தால் மெதிவ்சிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் அந்த சாகச இன்னிங்ஸை தொடர்ந்தும் பார்க்க முடியுமாக இருக்கும்.
இலங்கை அணி ரங்கன ஹேரத்தை மையமாகக் கொண்டு சுழற்பந்து வீச்சில் அதிக கவனம் செலுத்தியபோது இந்திய துடுப்பாட்ட வீரர்கள் அதற்கு தம்மை தயார்படுத்தி ஆடியதை பார்க்க முடிந்தது. ஆனால் வேகப்பந்து வீச்சில் இந்தியா சற்று தடுமாற்றம் கண்டது. காலி டெஸ்டில் நுவன் பிரதீப் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் கொழும்பு டெஸ்டில் அதிகம் பந்துவீசியே இருக்காத திமுத் கருணாரத்ன கூட மிதவேகப்பந்து வீசி தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார். இந்திய அணியின் இந்த பலவீனத்தை இலங்கை சரியாக பயன்படுத்திக் கொண்டால் விக்கெட்டுகளை சாய்க்க முடியும்.
விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வல்ல இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 48 பந்துகளில் பெற்ற 51 ஓட்டங்களுமே அதிகம். அப்போது இலங்கை துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்களுக்கு திக்வெல்ல அபாரமாக ஆடி ஓட்டங்களை சேர்த்தார். திக்வெல்ல முதல் டெஸ்டிலும் இவ்வாறு ஆடி 67 ஓட்டங்களை பெற்றிருந்தார். திக்வல்லவின் அட்ட பாணியை கொண்டு இலங்கை அணி அதிகம் கற்றுக்கொள்ள முடியும்.
மேலும் சாதிக்க எதிர்பார்க்கும் இந்தியா
SSC டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸால் வென்றபோது அவ்வணி கடந்த 10 போட்டிகளில் 8 ஆவது வெற்றியை பெற்றது. அதேபோன்று டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக எட்டாவது வெற்றியை பெற்றது. அது போன்றே இலங்கை மண்ணில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றியை பெறுவதும் முதல் முறையாக இருந்தது.
எனவே, முழுமை பெற்ற ஓர் அணியை கொண்டிருக்கும் இந்தியா தனது சாதனை பட்டியலை நீட்டிக் கொள்ளும் நோக்கிலேயே வரும் சனிக்கிழமை மூன்றாவது டெஸ்டில் களமிறங்கும்.
இந்த வரிசையில் இந்திய அணி பல்லேகல டெஸ்டை வெற்றி பெற்றால் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெளிநாட்டு மண்ணில் 3-0 என முழுமையாக வெல்லும் முதல் சந்தர்ப்பமாக அது இருக்கும். இதற்கு முன்னர் இந்திய அணி மூன்று தடவைகள் முழுமையாக தொடரில் வென்றுள்ளது. எனினும் அவை அனைத்தும் சொந்த மண்ணில் நிகழ்த்திய சாதனைகளாகும்.
இதுவே, இலங்கை அணி தனது சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இதுவரை ஒரு தடவையே தோற்றுள்ளது. அது நிகழ்ந்து தற்போது 13 ஆண்டுகள் எட்டிவிட்டன. அப்போது பலம்மிக்க அணியாக இருந்த அவுஸ்திரேலியாவிடமே இலங்கை இந்த மோசமான நிலையை எட்டியது.
இந்த நிலையில் பல்லேகல டெஸ்டில் இந்திய அணி சில மாற்றங்களுடனே களமிறங்க எதிர்பார்த்துள்ளது. குறிப்பாக ஐ.சி.சி ஒழுக்காற்று விதியை மீறியதால் இடைநீக்கத்திற்கு உள்ளாகி இருக்கும் சுழற்பந்து வீச்சாளர் ரவிந்திர ஜடேஜா இந்த டெஸ்டில் விளையாட மாட்டார்.
ஜடேஜாவுக்கு தடை விதித்தது ஐ.சி.சி
இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவின்திர ஜடேஜாவுக்கு சர்வதேச..
அதற்குப் பதில் இந்தியாவின் 15 பேர் குழாமில் டெஸ்ட் அனுபவம் அற்ற சுழற்பந்து வீச்சாளர் அக்ஷார் படேல் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜடேஜாவின் இடத்திற்கு இவருடன் மற்றைய சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் போட்டி போடுகிறார்.
இந்திய துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் சோபித்து வரும் நிலையில் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படுவதற்கு அப்பால் குறிப்பிட்டு மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவை தலைவர் விராத் கோலிக்கு இல்லை. குறிப்பாக இந்த டெஸ்ட் தொடரில் சிதேஷ்வர் புஜாரா இரண்டு சதங்களுடன் அதிகபட்சமாக 301 ஓட்டங்களை பெற்றிருக்கிறார். இதன் ஓட்ட சராசரி 100 ஐ எட்டுவது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்க்கப்படும் இந்திய குழாம்
விராட் கோலி, லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், சிதேஷ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே, ரவிச்சந்திரன் அஷ்வின், விரிதிமான் சாஹா (வி.கா), ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், முஹமட் ஷமி, இஷான்த் ஷர்மா உமேஷ் யாதவ்
பரீட்சயம் இல்லாத பல்லேகல மைதானம்
கண்டியில் இருக்கும் பல்லேகல சர்வதேச மைதானம் ஒப்பீட்டளவில் புதிய மைதானம் என்பதோடு டெஸ்ட் போட்டிகளில் அதிக பரீட்சயம் இல்லாத ஆடுகளமாகும். 2010 ஆம் ஆண்டிலேயே இலங்கை இந்த மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்தியா இங்கு இதற்கு முன்னர் டெஸ்ட் போட்டிகளில் ஆடியதில்லை.
இதுவரை இங்கு நடைபெற்ற ஐந்து டெஸ்ட்களில் இலங்கை 2016 ஆம் ஆண்டு நடந்த அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் வென்றது. எனினும் 2015ஆம் ஆண்டு பாகிஸ்தானிடம் தோற்றது. ஏனைய மூன்று போட்டிகளும் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தன.
குசல் மெண்டிசுக்கு இந்த மைதானம் முக்கியமானதாகும். கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் தனி ஒருவராக 176 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியை கரைசேர்த்தார். அவரது சதமே அவுஸ்ரேலியோவுக்கு எதிராக சவாலான வெற்றி இலக்கை நிர்ணயிக்க காரணமானது.
பல்லேகலயில் முதல் இன்னிங்ஸின் ஓட்ட சராசரி 198 ஆகும். கடைசியாக இங்கு முதல் இன்னிங்ஸில் பெறப்பட்ட ஓட்டங்கள் 117, 278 மற்றும் 226 ஆகும்.
இங்கு 47 வீதமான ஓட்டங்கள் பௌண்டரிகள் மூலமே பெறப்பட்டிருக்கின்றன. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்த மைதானத்தில் துடுப்பாட்ட வீரர்கள் 100 பந்துகளுக்கு 50.9 ஓட்டங்கள் வீதமும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 44.9 ஓட்டங்கள் வீதமும் பெற்றுள்ளனர்.
இவ்வாறான ஒரு நிலையில், இந்த மைதானத்தில் தமக்கு பரீட்சயம் இல்லாத நிலையில், வெளி மண்ணில் சாதனை வெற்றி பெறும் நோக்குடன் இந்திய அணியும், கௌரவத்தைக் காப்பதற்கான வெற்றியைப் பெறும் நோக்கில் இலங்கை அணியும் இந்த எதிர்பார்ப்பு மிக்க மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சனிக்கிழமை களம் காணவுள்ளன.
>> மேலும் பல செய்திகளைப் படிக்க <<