சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 203 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளதுடன், மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, குறித்த சுற்றுப் பயணத்தில் T20 தொடரினை நிறைவு செய்த பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
டி20 போட்டிகளில் எந்த அணியையும் இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது – சர்பராஸ் அஹ்மட்
நேற்று (5) லாஹூரில் இடம்பெற்று முடிந்த இலங்கை – பாகிஸ்தான்….
அந்தவகையில், ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் அங்கமாக அமையும் இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த புதன்கிழமை (2) விசாகப்பட்டினம் மைதானத்தில் ஆரம்பமாகியது.
இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காக தெரிவு செய்து கொண்டார்.
அதன்படி, முதலில் துடுப்பாடிய இந்திய கிரிக்கெட் அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான மயான்க் அகர்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் அபார ஆட்டத்தோடு தமது முதல் இன்னிங்ஸினை 136 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 502 ஓட்டங்கள் பெற்றவாறு இடை நிறுத்தியது.
இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் மயான்க் அகர்வால் டெஸ்ட் போட்டிகளில் முதல் தடவையாக இரட்டைச் சதம் கடந்து 215 ஓட்டங்களை பெற்றார். மறுமுனையில் ரோஹித் சர்மா 176 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இதேநேரம், தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பில் சுழல் பந்துவீச்சாளரான கேசவ் மஹராஜ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி 131.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 431 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் டீன் எல்கார் அவரின் 12 ஆவது டெஸ்ட் சதத்துடன் 160 ஓட்டங்களைக் குவித்தார். இவரோடு தென்னாபிரிக்க அணிக்காக மத்திய வரிசையில் சதம் தாண்டிய குயின்டன் டி கொக் 111 ஓட்டங்களை எடுத்ததோடு, தென்னாபிரிக்க அணித் தலைவரான பாப் டு பிளேசிஸ் அரைச்சதத்துடன் 55 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் சுழல் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் 7 விக்கெட்டுகளை சாய்த்திருந்ததோடு, ரவிந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளை சுருட்டியிருந்தார்.
இதனை அடுத்து 71 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த இந்திய கிரிக்கெட் அணி, 67 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 323 ஓட்டங்கள் பெற்ற நிலையில் தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் சார்பில் இப்போட்டியில் இரண்டாவது தடவையாக சதம் பெற்ற ரோஹித் சர்மா அவரின் 5 ஆவது டெஸ்ட் சதத்தோடு 127 ஓட்டங்களை பெற்றார். அத்துடன் செட்டெஸ்வார் புஜாரா அரைச்சதம் தாண்டி 81 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்த அஷ்வின்
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த போட்டிகளில் 350…..
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் இம்முறை கேசவ் மஹராஜ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 394 ஓட்டங்கள் தென்னாபிரிக்க அணிக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, தமது இரண்டாம் இன்னிங்ஸில் 63.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 191 ஓட்டங்களை மாத்திரம் குவித்து போட்டியில் தோல்வியினை தழுவியது.
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில், டேன் பெய்ட் அரைச்சதம் தாண்டி 56 ஓட்டங்கள் குவிக்க, செனுரன் முத்துசாமி 49 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில், வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் ஷமி 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், ரவிந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய கிரிக்கெட் அணியின் ரோஹித் சர்மா தெரிவு செய்யப்பட்டிருந்தார். இந்திய – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் அடுத்த போட்டி புனே நகரில் எதிர்வரும் வியாழக்கிழமை (10) ஆரம்பமாகவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இந்தியா (முதல் இன்னிங்ஸ்) – 502/7d (136) – மயான்க் அகர்வால் 215, ரோஹித் சர்மா 176, கேசவ் மஹராஜ் 189/3
தென்னாபிரிக்கா (முதல் இன்னிங்ஸ்) – 431 (131.2) – டீன் எல்கார் 160, குயின்டன் டி கொக் 111, பாப் டு பிளேசிஸ் 56, ரவிச்சந்திரன் அஷ்வின் 145/7, ரவிந்திர ஜடேஜா 124/2
இந்தியா (இரண்டாம் இன்னிங்ஸ்) – 323/4d (67) – ரோஹித் சர்மா 127, செட்டெஸ்வார் புஜாரா 81, கேசவ் மஹராஜ் 129/2
தென்னாபிரிக்கா (இரண்டாம் இன்னிங்ஸ்) – 191 (63.5) – டேன் பெய்ட் 56, செனுரன் முத்துசாமி 49*, மொஹமட் ஷமி 35/5, ரவிந்திர ஜடேஜா 87/4
முடிவு – இந்திய கிரிக்கெட் அணி 203 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<