இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான திகதி மாற்றம்?

ICC Men's Cricket World Cup 2023

276

ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டிக்கான திகதி மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  

இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை கடந்த மாதம் ICC வெளியிட்டது 

அதன்படி முதல் போட்டியில் நடப்புச் சம்பியன் இங்கிலாந்துநியூசிலாந்து அணிகள் அஹமதாபாத்தில் மோத உள்ளன. இந்த நிலையில், இம்முறை உலகக் கிண்ணத்தை நடாத்தும் வரவேற்பு நாடான இந்திய அணி தனது முதல் போட்டியில் அவுஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. 

இதனிடையே, மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியான இந்தியாபாகிஸ்தான் போட்டி ஒக்டோபர் 15ஆம் திகதி அஹமதாபாத்தில் நடைபெறவுள்ள நிலையில், குறித்த போட்டியானது வேறு திகதிக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   

ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையில் இந்தியாவில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, ஒக்டோபர் 15ஆம் திகதி நவராத்திரி கொண்டாட்டத்தின் முதல் நாள் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாபாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை வேறு திகதிக்கு மாற்ற BCCI க்கு அந்த மாநிலத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 

குஜராத்தில் நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், அகமதாபாத்தில் பாதுகாப்பு பணிகளுக்கு பொலிஸார் பற்றாக்குறை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அதிக மக்கள் நகரங்களுக்கு வருவதால் சன நெரிசல் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

எனவே, இந்த கோரிக்கையை ஏற்று இந்தியாபாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை வேறு திகதிக்கு மாற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<