ஒருநாள் ஆசியக் கிண்ணத் தொடரின் சுபர் 4 சுற்றுக்காக நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான மோதலில் இந்திய அணி 228 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
>> இந்தியாவின் சவாலை எதிர்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி
மேலும் இந்த வெற்றியுடன் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் ஓட்ட எண்ணிக்கை அடிப்படையில் தமது மிகப் பெரிய வெற்றியினையும் பதிவு செய்துள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) ஆரம்பமான போதும் மழை காரணமாக சில ஓவர்களே வீச முடியுமாக காணப்பட்டிருந்தது. பின்னர் திங்கட்கிழமை (11) இப்போட்டி தொடர்ந்திருந்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் முதலில் இந்திய வீரர்களை துடுப்பாடப் பணித்தார்.
இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய கிரிக்கெட் அணி சுப்மான் கில் – ரோஹிட் சர்மா ஆகியோரின் அதிரடியான ஆரம்பத்தோடும் விராட் கோலி மற்றும் KL ராகுல் ஆகியோரின் அபார சதங்களோடும் 50 ஓவர்கள் நிறைவில் 356 ஓட்டங்களைக் குவித்தது.
இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் விராட் கோலி தன்னுடைய 47ஆவது சதத்தோடு வெறும் 94 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 9 பெளண்டரிகள் அடங்கலாக 122 ஓட்டங்கள் எடுத்தார். அதேநேரம் KL ராகுல் தன்னுடைய 6ஆவது ஒருநாள் சதத்துடன் 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பெளண்டரிகள் அடங்கலாக 122 ஓட்டங்கள் எடுத்தார். இதேநேரம் ரோஹிட் சர்மா 56 ஓட்டங்களையும், சுப்மான் கில் 58 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். இப்போட்டியில் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 13,000 ஓட்டங்கள் என்கிற புதிய மைல்கல்லையும் நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் பந்துவீச்சில் சஹீன் அப்ரிடி மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 357 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி வெறும் 32 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் படுதோல்வி அடைந்தது.
பாகிஸ்தான் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக பகார் சமான் 27 ஓட்டங்களை எடுக்க, இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் வெறும் 25 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தனது தரப்பின் வெற்றியை உறுதி செய்தார்.
>> இங்கிலாந்தில் விளையாடவுள்ள விஷ்வ பெர்னாண்டோ
போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரரான விராட் கோலி தெரிவாகினார்.
போட்டியின் சுருக்கம்
இந்தியா – 356/2 (50) விராட் கோலி 122(94)*, KL ராகுல் 111(106)*, சுப்மான் கில் 58(52), ரோஹிட் சர்மா 56(49)
பாகிஸ்தான் – 128 (32) பகார் சமான் 27(50), குல்தீப் யாதவ் 25/5(8)
முடிவு – இந்தியா 228 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<