இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியுசிலாந்து அணியினர் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றனர். இதன் இரண்டாவது போட்டி, கொல்கத்தாவில் செம்டம்பர் 30ஆம் திகதி ஆரம்பமாகி நான்காவது நாளான இன்று நிறைவடைந்தது. இன்று முடிவடைந்த போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியடைந்ததால், இந்திய அணி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி, தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 316 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்சில் 263 ஓட்டங்களையும் பெற்றது. நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 204 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில் 197 ஓட்டங்களையும் பெற்று 178 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
முதலாவது இன்னிங்சிலும், இரண்டாவது இன்னிங்சிலும் முறையே 54 மற்றும் 58 ஓட்டங்களை பெற்று இந்திய அணியின் சகா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாராவும் முதல் இன்னிங்சில் 87 ஓட்டங்களை பெற்று சிறப்பான ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணியின் வீரர்கள் துடுப்பாட்டத்தில் சிறந்த முறையில் பிரகாசிக்காத போதும், அவ்வணியின் லதம் மாத்திரம் இரண்டாவது இன்னிங்சில் 74 ஓட்டங்களை பெற்று ஓரளவு ஆறுதல் அளித்தார்.
முதலாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணியின் ஹென்றி 3 விக்கெட்டுக்களையும், ஜீத்தன் பட்டேல், போல்ட், வாக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி சிறப்பாக பந்து வீசி நியூசிலாந்து அணியை நிலைகுலையச் செய்து வெற்றியை தன்வசமாக்கியது. இதன் போது அஸ்வின், சமி, ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும் புவனேஸ்வர் குமார் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 113 புள்ளிகளை பெற்று இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.
போட்டியின் சுருக்கம்
இந்தியா (முதல் இன்னிங்ஸ்): 360/10 (104.5) – புஜாரா 87, ரஹானே 77, ஹென்றி 46/3, போல்ட் 46/2
நியுசிலாந்து (முதல் இன்னிங்ஸ்): 204/10 (53) – ஜீத்தன் பட்டேல் 47, டெய்லர் 36, புவனேஸ்வர் 48/5, சமி 70/3
இந்தியா (இரண்டாவது இன்னிங்ஸ்): 216/10 (76.5) – ரோஹித் 82, சகா 58, போல்ட் 38/3, ஹென்றி 59/3
நியுசிலாந்து (இரண்டாவது இன்னிங்ஸ்): 197/10 (81.1) – லதம் 74, ரோன்ச்சி 32, ஜடேஜா 41/3, ஷமி 46/3
போட்டியின் ஆட்ட நாயகன் – புஜாரா (இந்தியா)
இந்த இரண்டு அணிகளும் மோதும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி ஓக்டோபர் 08 ஆம் திகதி இந்தூரில் ஆரம்பமாகவுள்ளது.