பே ஓவல் (Bay Oval) மைதானத்தில் இன்று (26) நிறைவுக்கு வந்திருக்கும் சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி நியூசிலாந்து வீரர்களை 90 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது. அத்தோடு இந்த வெற்றியுடன் இந்திய அணி, ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் 2-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.
முன்னதாக இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார்.
நியூசிலாந்து அணியை இலகுவாக வீழ்த்தியது இந்தியா
முதலில் துடுப்பாடிய இந்திய அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் சிக்கர் தவான் ஆகியோர் வலுவளிக்க முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களாக களம் வந்த அணித்தலைவர் விராட் கோஹ்லி, அம்பத்தி ராயுடு மற்றும் மஹேந்திர சிங் டோனி ஆகியோரும் தங்களது பெறுமதியான பங்களிப்பினை வழங்கினர்.
இவ்வீரர்களின் துடுப்பாட்ட உதவியோடு இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.
இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்டிருந்த ரோஹித் சர்மா அவரது 38 ஆவது ஒரு நாள் அரைச் சதத்தோடு 96 பந்துகளில் 9 பெளண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 87 ஓட்டங்களை குவிக்க, சிக்கர் தவான் 27 ஆவது ஒரு நாள் அரைச்சதத்துடன் 9 பெளண்டரிகள் உள்ளடங்கலாக 66 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இவர்களோடு சேர்த்து மஹேந்திர சிங் டோனி ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களையும் அம்பத்தி ராயுடு 43 ஓட்டங்களையும் அணித்தலைவர் விராட் கோஹ்லி 43 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பாக ட்ரென்ட் போல்ட் மற்றும் லோகி பெர்குஸன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.
இதனை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 325 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி, ஆரம்பம் முதலே தடுமாற்றம் காட்டி கடைசியில் 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.
நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச தனிநபர் ஓட்டங்களை டக் ப்ரெஸ்வெல் 57 ஓட்டங்களுடன் பெற, இந்திய அணியின் பந்துவீச்சில் சுழல் வீரரான குல்தீப் யாதவ் 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், புவ்னேஸ்வர் குமார் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியை உறுதி செய்தனர்.
ஹார்திக் பாண்டியா, கே.எல் ராகுலின் தடை நீங்கியது
போட்டியின் ஆட்ட நாயகன் விருது இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
நியூசிலாந்து – இந்திய அணிகளுக்கு இடையிலான அணி மூன்றாவது ஒரு நாள் போட்டி, இரண்டாவது போட்டி நடைபெற்ற இதே பே ஓவல் மைதானத்தில் திங்கட்கிழமை (26) நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இந்தியா – 324/4 (50) – ரோஹித் சர்மா 87(96), சிக்கர் தவான் 66(67), மஹேந்திர சிங் டோனி 48*(33), அம்பத்தி ராயுடு 47(49), விராட் கோலி 43(45), ட்ரென்ட் போல்ட் 61/2(10), லோக்கி பெர்குஸன் 81/2(10)
நியூசிலாந்து – 234 (40.2) – டக் ப்ரெஸ்வெல் 57(46), கொலின் மன்ரோ 31(41), குல்தீப் யாதவ் 45/4(10), யுஸ்வேந்திர சாஹல் 52/2(9.2), புவ்னேஸ்வர் குமார் 42/2(7)
முடிவு – இந்திய அணி 90 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<