நியூசிலாந்தை வென்றது இந்தியா

828
India vs New Zealand Cricket
@BCCI

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய 1ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் ஆடிய  இந்திய அணி முதல் இனிங்ஸில் 318 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் முதல் இனிங்ஸிற்காக ஆடிய  நியூசிலாந்து அணி 262 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 56 ஓட்டங்கள்  முன்னிலையில் 2ஆவது இனிங்ஸை ஆடிய இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்பிற்க்கு 377 ஓட்டங்களைக் குவித்து ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

இதனால் நியூசிலாந்துக்கு 434 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி  நேற்றைய 4ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்க்கு 93 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அப்போது களத்தில் ரோஞ்சி 38 ஓட்டங்களோடும் சான்ட்னர் 8 ஓட்டங்களோடும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

பின்பு இன்று 5ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. தோல்வியைத் தவிர்க்க 6 விக்கெட்டுகள் கைவசமிருக்க மேலும் 340 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் நியூசிலாந்து தொடர்ந்து விளையாடியது.

இந்திய அணி எஞ்சிய 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றி பெறும் இலக்குடன் பந்துவீச்சை தொடர்ந்தது. ரோஞ்சி – சான்ட்னர் ஜோடி இந்திய பந்துவீச்சை நம்பிக்கையுடன் எதிர்த்து விளையாடியது. ரோஞ்சி 83 பந்துகளில் 50 ஓட்டங்களைத் தொட்டார். இதில் 5 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும். அஸ்வின், ஜடேஜா மாறி, மாறி பந்து வீசியும் இந்த ஜோடியைப் பிரிக்க சிரமப்பட்டனர். இந்த ஜோடி இணைந்து 207 பந்துகளில் 100 ஓட்டங்களை 5ஆவது விக்கெட்டுக்காக இணைப்பாட்டமாக சேர்த்தனர்.

இறுதியாக  ஆட்டத்தின் 58ஆவது ஓவரில் இந்த ஜோடியை ஜடேஜா ஒரு வழியாகப் பிரித்தார். ரோஞ்சி அடித்த பந்தை அஸ்வின் பிடித்தார். அவர் 120 பந்துகளில் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 80 ஓட்டங்களை எடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது நியூசிலாந்து அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 158 ஆக காணப்பட்டது.

அடுத்து வாட்லின் களம் வந்தார். இந்த ஜோடியும் நேர்த்தியுடன் ஆடியது. சான்ட்னர் 149 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கலாக 50 ஓட்டங்களை எடுத்தார்.

மொத்த ஓட்டங்கள் 194 ஆக உயர்ந்த போது இந்த ஜோடியை முஹமத்  சமி பிரித்தார். வாட்லின் 18 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார். பின் மதிய உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 73 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்க்கு 205 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. சான்ட்னர் 57 ஓட்டங்களோடும், சோதி 02 ஓட்டங்களோடும், ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு நியூசிலாந்து அணியின் 8ஆவது விக்கெட்டும் சரிந்தது. இந்திய பந்து வீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த சான்ட்னெர் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். அவர் 179 பந்துகளில் 71 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார். இதில் 7 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும்.

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் எஞ்சிய 2 விக்கெட்டுகளையும் இந்திய வீரர்கள் எளிதில் கைப்பற்ற நியூசிலாந்து 236 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இதனால் 197 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தனது 500ஆவது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்று, 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக பந்துவீச்சு துடுப்பாட்டம் இரண்டிலும் பிரகாசித்த ரவீந்திர ஜடேஜா தெரிவு செய்யப்பட்டார்.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை(30) கொல்கத்தா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 318/10
முரளி விஜே 65, புஜாரா 62, ஜடேஜா 42*, ரவிஷந்திரன் அஷ்வின் 40
சான்ட்னெர் 94/3, போல்ட் 67/3

நியூசிலாந்து – 262/10
கேன் வில்லியம்சன் 75, டொம் லெதம் 58, லூக் ரொஞ்சி 38
ரவீந்திர ஜடேஜா 73/5, ரவி அஷ்வின் 93/4

இந்தியா – 377/5d
முரளி விஜே 76, புஜாரா 78, ரோஹித் ஷர்மா 68*, ஜடேஜா 50*
இஷ் சோதி 99/2, சான்ட்னெர் 79/2

நியூசிலாந்து – 236/10
லூக் ரொஞ்சி 80,சான்ட்னெர் 71. கேன் வில்லியம்சன் 25, ரோஸ் டெய்லர் 17
ரவி அஷ்வின் 132/6, முஹமத் சமி 18/2

இந்திய அணி 197 ஒட்டங்களால் வெற்றி