ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேபாளம் அணிக்கு எதிராக இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து, A குழுவில் இருந்து 2ஆவது அணியாக சுபர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றது.
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை (04) நடைபெற்ற குழு A இற்கான கடைசி லீக் போட்டியில் இந்தியா – நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய நேபாளம் அணிக்கு குஷால் புர்டெல் – ஆசிப் ஷேக் ஜோடி சிறந்த ஆரம்பத்தைக் கொடுத்து முதல் விக்கெட்டுக்கு 65 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். நிதானமாக துடுப்பெடுத்தாடிய குஷால் புர்டெல் 25 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்கள், 3 பௌண்டரிகளுடன் 38 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த பிம் ஷாக்கி (7), அணித் தலைவர் ரோஹித் பவ்டெல் (5), குஷால் மல்லா (2) ஆகிய மூவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இருப்பினும் மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆசிப் ஷேக் தனது 10ஆவது ஒருநாள் அரைச் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
மிகவும் நிதானமாகத் துடுப்பெடுத்தாடிய ஆசிப் ஷேக 97 பந்துகளை எதிர்கொண்டு 8 பௌண்டறிகளுடன் 58 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த குல்சன் ஜாவும் 23 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் 7ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த திபிந்திர சிங் ஐரி – சோம்பால் கமி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதில் சிங் ஜரி 25 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க மறுபக்கம் அரைச் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கட்ட சோம்பால் கமி 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அரைச் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, நேபாளம் அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ஓட்டங்களை எடுத்தது.
இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா, மொஹமட் சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- சுபர் 4 சுற்றுக்காக கட்டாய வெற்றியினை எதிர்பார்த்துள்ள இலங்கை
- இந்திய அணியில் இருந்து விலகி நாடு திரும்பிய பும்ரா!
- இந்திய அணியுடன் இணையும் கேஎல் ராகுல்
பின்னர் 231 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட வந்த இந்திய அணிக்கு சுப்மன் கில் – ரோஹித் சர்மா ஆகிய இருவரும் ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர். எவ்வாறாயினும், இந்திய அணி 2.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களை எடுத்தபோது மழை குறுக்கிட போட்டி தடைபட்டது.
இரவு 8.18க்கு தடைப்பட்ட போட்டி 2 மணித்தியாலங்களின் பின்னர் இரவு 10.15 மணிக்கு மீண்டும் தொடர்ந்தபோது டக்வேர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 23 ஓவர்களில் 145 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக ஆடி ஓட்டங்களைக் குவித்ததுடன், அடுத்தடுத்தது அரைச் சதம் அடித்து அசத்தினார்கள். இதனால், இந்திய அணி 20.1 ஓவர்களில் இலக்கை கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோஹித் சர்மா 74 ஓட்டங்களையும், சுப்மன் கில் 67 ஓட்டங்களையும் சேர்த்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஆசியக் கிண்ணத் தொடரின் சுபர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றது.
இதன்படி, A குழுவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த இந்திய அணி சுபர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் 10ஆம் திகதியும், இரண்டாவது போட்டியில் B குழுவில் முதலிடத்தைப் பிடிக்கும் அணியுடன் 12ஆம் திகதியும், B குழுவில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணியுடன் மூன்றாவது போட்டியில் 15ஆம் திகதியும் மோதுகிறது.
சுபர் 4 சுற்றின் முடிவில் மொத்தம் நான்கு அணிகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் இரண்டு அணிகள் 17ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<