இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி  

235

சென்னையில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ் ராமசாமி அறிவித்துள்ளார்.

>>ரன்ஜி கிண்ண தொடரை முதன்முறையாக நிறுத்தும் இந்தியா!<<

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகள் கொண்ட T20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ளது

இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 5ஆம் திகதியும், 2ஆவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 13ஆம் திகதியும் சென்னை சேப்பாக்கம் எம்..சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளன

முன்னதாக, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்னை டெஸ்ட்டுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது. இந்நிலையில், பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு சுகாதார தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து தற்போது ஒருசில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2ஆவது டெஸ்ட் போட்டியில் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்கப்படவுள்ளனர். தமிழக அரசு தளர்வுகள் அறிவித்ததை அடுத்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே இங்கிலாந்து தொடருக்கு 50 சதவீத ரசிகர்களுக்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளதால் 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை விரைவில் தொடங்கும் எனத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ். ராமசாமி தெரிவித்துள்ளார்

>>ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரருக்கான விருது: ஐ.சி.சி அறிமுகம்<<

மேலும் முதல் டெஸ்ட் போட்டிக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கழக உறுப்பினர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.  

முன்னதாக அஹமதாபாத்தின் சர்தார் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள 3ஆவது மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டிகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக பிசிசிஐ அறிவித்திருந்தது

அத்துடன், உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான சர்தார் பட்டேல் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியான இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாகவும் பிசிசிஐ வட்டாரங்களில் கூறப்பட்டுள்ளது.

எனவே, சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு இந்திய ரசிகர்களுக்கு மைதானத்தில் போட்டிகளை நேரடியாக பார்வையிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளது

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<