இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து குழாம் இன்று அறிவிக்கப்பட்டது.
இதில் முழங்கை உபாதை காரணமாக வேகப் பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சரும், தனிப்பட்ட காரணங்களுக்காக ஜோ ரூட்டும் இங்கிலாந்து அணியில் இடம்பெறவில்லை.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், ஐந்து T20 போட்டி போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகின்றது.
>> இந்திய ஒருநாள் அணியில் சூர்யகுமார் யாதவ், குருணால், பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு
இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், அடுத்ததாக நடைபெற்ற T20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 23ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.
இந்தநிலையில், இந்தியாவுடனான ஒருநாள் தொடருக்கான 14 பேர் கொண்ட இங்கிலாந்து குழாத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இயன் மோர்கன் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து குழாமில் ஜோ ரூட் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக சேம் பில்லிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல், முழங்கை காயம் காரணமாக அந்த அணியின் மிக முக்கிய வேகப் பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சர் ஒட்டுமொத்த தொடரில் இருந்தும் விலகியதால் அவரது பெயரும் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து குழாமில் இடம்பெறவில்லை.
எனினும், 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் விளையாடிய இங்கிலாந்து அணியில் இருந்த 9 வீரர்கள் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ளனர்.
>> T20 போட்டிகளில் அதிக வெற்றி – டோனியை முந்திய அஸ்கர் அப்கான்
விக்கெட் காப்பாளராக ஜோஸ் பட்லரும், துடுப்பட்ட வீரர்கள் வரிசையில் ஜொனி பேயர்ஸ்டோ, ஜேசன் ரோய், சாம் பில்லிங்ஸ் ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
சுழல் பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஆதில் ரஷீத் மற்றும் மொயின் அலி ஆகிய இருவரும் வழக்கம் போல இடம்பெற்றுள்ளனர்.
அத்துடன், சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற காரணத்தால் கூடுதலாக மெட் பார்க்கின்ஸன் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் ஆகிய இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர காத்திருப்பு வீரர்களாக ஜெக் போல், கிறிஸ் ஜோர்டன், டாவிட் மலான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். எந்த வீரருக்காவது காயம் அல்லது உடல்நலக் குறைவு ஏற்பட்டால் இவர்களில் ஒருவர் களமிறங்குவர்.
ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து குழாம்:
இயன் மோர்கன் (அணித் தலைவர்), ஜோஸ் பட்லர் (விக்கெட் காப்பாளர்), ஜேசன் ரோய், ஜொனி பேயர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், பென் ஸ்டோக்ஸ், சாம் கரண், டொம் கரண், மொயின் அலி, ஆதில் ரஷீத், லியம் லிவிங்ஸ்டன், மெட் பார்க்கின்ஸன், மார்க் வுட், ரீஸி டாப்ளே.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<