இரண்டாவது T20 போட்டியை வெற்றியீட்டி தொடரை சமப்படுத்தியது இந்தியா

442
India Vs England 2nd T20 match Tamil

மூன்று போட்டிகளை கொண்ட இங்கிலாந்துடனான T20 தொடரின் முதல் போட்டியில் 11 பந்துகள் எஞ்சிய நிலையில் 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணியை கட்டாயம் வெற்றி கொள்ள வேண்டிய நிலையில் இரண்டாவது T20 போட்டியில் களமிறங்கிய இந்திய அணி, 5 ஓட்டங்களால் வெற்றியீட்டி தொடரை சமப்படுத்தியது.

நாக்பூரில் இன்று நடைபெற்ற போட்டித் தொடரை தீர்மானிக்கக்கூடிய இரண்டாவது T20 போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் முதலில் இந்திய அணியை துடுப்படுமாறு பணித்தார்.

அத்துடன் நாக்பூர் கிரிக்கெட் களம் சுழல் பந்து வீச்சுக்கு உகந்ததாக இருந்ததனால் மேலதிக சுழல் பந்து வீச்சாளராக லியாம் டோசன் இன்றைய இங்கிலாந்து அணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்தார். அதே நேரம் கடந்த போட்டியில் 32 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டினை வீழ்த்தியிருந்த லியாம் ப்ளங்க்கெட்டுக்கு இன்றைய போட்டியில் ஓய்வளிக்கப்பட்டது.

நாக்பூர் அரங்கில் நடைபெற்ற கடந்த 10 T20 போட்டிகளில், மூன்று போட்டிகளில் மட்டுமே இரண்டாம் இன்னிங்க்சில் துடுப்பாடிய அணிகள் வெற்றி பெற்றிருந்தாலும், தான் முதலில் பந்து வீச்சை தெரிவு செய்யவே எதிர்பார்த்திருந்ததாக விராத் கொஹ்லி தெரிவித்தார்.

அதே நேரம், நடந்து முடிந்த முதலாவது T20 போட்டியில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த பர்வேஸ் ரசூலுக்கு பதிலாக அமித் மிஷ்ரா உள்வாங்கப்பட்டிருந்தார்.

அந்த வகையில், களமிறங்கிய விராத் கொஹலி மற்றும் லோகேஷ் ராகுல் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 30 ஓட்டங்களை பெற்று சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். விராத் கொஹ்லி 21 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை கிறிஸ் ஜோர்டனின் பந்து வீச்சில் லியாம் டோசனிடம் பிடி கொடுத்து துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் முறையே 7, 4 ஓட்டங்களுடன் வந்த வேகத்திலேயே ஓய்வறை திரும்பிச் சென்றனர். எனினும், மனிஷ் பண்டே, ராகுலுடன் இணைந்து நான்கவது விக்கெட்டுக்காக 56 ஓட்டங்களை விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை 125 ஆக இருந்த பொழுது லோகேஷ் ராகுல் 71 ஓட்டங்களுக்கு கிறிஸ் ஜோர்டனின் பந்துவீச்சில் பென் ஸ்ட்ரோக்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகேந்திர சிங் தோனி 5 ஓட்டங்களுக்கு கிறிஸ் ஜோர்டனின் பந்து வீச்சில் நேரடியாக போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ஓட்டங்களை பெற்று, இங்கிலாந்து அணிக்கு 145 ஓட்டங்களை வெற்றி இலக்காக நியமித்தது.

இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான அதிரடி வீரர் ஜேசன் ரோய் மற்றும் சாம் பில்லிங்க்ஸ் ஆகியோரை முறையே 10, 12 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தார் அனுபவ பந்து வீச்சாளர் ஆசிஷ் நேஹ்ரா. அதனை தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் மற்றும் அணித்தலைவர் இயன் மோர்கன் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்காக 43 ஓட்டங்களை பெற்று ஒட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

அதிரடியாக துடுப்பாடிய பென் ஸ்ட்ரோக் 27 பந்துகளில் 38 ஓட்டங்களை விளாசி இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்த போதிலும், ஆசிஷ் நேஹ்ராவின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்தார். இறுதி ஓவரில் வெற்றி பெற 8 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் பந்து வீசிய ஜஸ்ப்ரிட் பூம்ராஹ் முதல் பந்திலேயே ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தார். அத்துடன் சிறப்பாக ஓட்டங்களை மட்டுப்படுத்தி பந்து வீசிய அவர் நான்காவது பந்தில் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஜொஸ் புட்ட்லரின் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

மூன்றவாதும் இறுதியுமான தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் போட்டி பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி பெங்களூர்ரில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்:

இந்தியா: 144/8 (20) – லோகேஷ் ராகுல் 71(47), மனிஷ் பண்டே 30(26), விராத் கொஹ்லி 21(15), கிறிஸ் ஜோர்டன் 3/22, மோயின் அலி 1/20

இங்கிலாந்து: 139/6 (20) – ஜோ ரூட் 38(38), பென் ஸ்டோக்ஸ் 38(27), இயன் மோர்கன் 17(23), ஆசிஷ் நேஹ்ரா 3/28, அமித் மிஷ்ரா 1/25, ஜஸ்ப்ரிட் பும்ராஹ் 20/2