கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா

192

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விஜே ஷங்கர் கடைசி ஓவரில் வீழ்த்திய இரண்டு விக்கெட்டுகள் மூலம் இந்திய அணி 8 ஓட்டங்களால் த்ரில் வெற்றி ஒன்றை பெற்றது.

நாக்பூரில், பகலிரவு போட்டியாக செவ்வாய்கிழமை (05) நடைபெற்ற ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட்டுகள் கைவசம் இருக்க கடைசி ஓவருக்கு 11 ஓட்டங்களை எடுக்க வேண்டி இருந்தபோது தனது ஆறாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆடிய தமிழக வீரர் ஷங்கர் அந்த ஓவரின் முதலாவது மற்றும் மூன்றாவது பந்தில் விக்கெட் வீழ்த்தினார்.

ஒருநாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த இந்திய அணி

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு ……

அணித்தலைவர் விராட் கோஹ்லி பெற்ற 116 ஓட்டங்களின் உதவியுடன் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 250 ஓட்டங்களை பெற்றது. இதில் வழக்கமான பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்வின் இரண்டு ஓவர்கள் மிச்சமிருக்கும் நிலையிலேயே தீர்க்கமான கடைசி ஓவரை வீச சங்கர் அழைக்கப்பட்டார்.

இதன்படி அவுஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 242 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. மார்கஸ் ஸ்டொய்னிஸ் அதிகபட்சமாக 52 ஓட்டங்களை பெற்றார்.

இந்த வெற்றியானது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இந்திய அணி பெறும் 500 ஆவது வெற்றியாகும். ஒருநாள் போட்டிகளில் அவுஸ்திரேலியாவுக்கு அடுத்து (558) இந்த மைல்கல்லை எட்டும் முதல் அணி இந்தியாவாகும்.

எட்டுவதற்கு சற்று இலகுவான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணிக்கும் ஆரோன் பின்ச் (37) மற்றும் உஸ்மான் கவாஜா (38) ஜோடி 83 ஓட்ட இணைப்பாட்டத்தை பெற்று சிறந்த ஆரம்பத்தை வழங்கியது. எனினும் இந்த இருவரும் அடுத்தடுத்த ஓவர்களிலேயே ஆட்டமிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து முக்கிய இடைவெளியில் மத்திய வரிசை விக்கெட்டுகள் சாய்ந்தது ஆஸி. அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

அன்டி பல்பைர்னியின் சதத்துடன் தொடரை சமன் செய்த அயர்லாந்து

சுற்றுலா அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் …..

முன்னதாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்தியா ஓட்டம் பெறும் முன்னரே முதல் விக்கெட்டை பறிகொடுக்க முதல் வரிசையில் வந்த கோஹ்லி தனது 40 ஆவது சதத்தை பெற்று அணியை கரைசேர்த்தார். இதன்போது அவர் 120 பந்துகளுக்கு முகம்கொடுத்து 10 பௌண்டரிகளை பெற்றார்.   

இதன்போது அவர் ஷங்கருடன் சேர்ந்து நான்காவது விக்கெட்டுக்கு 81 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டார். சிறப்பாக ஆடிய ஷங்கர் 41 பந்துகளில் 46 ஓட்டங்களை பெற்ற நிலையில் ரன் அவுட் ஆனார்.

இந்த வெற்றியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றதோடு இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் வெள்ளிக்கிழமை (8) ரொன்சியில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 250 (48.2) – விராட் கோஹ்லி 116, விஜேய் ஷங்கர் 46, பெட் கம்மின்ஸ் 4/29, அடம் சம்பா 2/62

அவுஸ்திரேலியா – 242 (49.3) – பீட்டர் ஹான்ட்ஸ்கொப் 48, மார்கஸ் ஸ்டொய்னிஷ் 52, குல்தீப் யாதெவ் 3/54, விஜே ஷங்கர் 2/15, ஜஸ்பிரிட் பூம்ராஹ் 2/29

முடிவு – இந்தியா 8 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<