விராட் கோஹ்லியின் சதம் மற்றும் MS டோனியின் அரைச்சதத்தின் உதவியோடு அவுஸ்திரேலியாவுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இந்திய அணி மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டுவந்துள்ளது.
அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 299 ஓட்ட வெற்றி இலக்கை எட்டுவதில் முக்கிய பங்காற்றிய கோஹ்லி 104 ஓட்டங்களை பெற்று ஆட்ட நாயகன் விருதை வென்றதோடு, கடைசி ஓவரில் சிக்ஸர் விளாசிய டோனி ஆட்டமிழக்காது அரைச்சதம் ஒன்றை பெற்றார்.
>>முதலாவது போட்டியில் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா
இதன் மூலம் இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) மெல்பேர்னில் நடைபெறவுள்ளது.
அடிலெயிட் ஓவல் மைதானத்தில் இன்று (15) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த அவுஸ்திரேலிய அணி அடுத்தடுத்த ஓவர்களில் ஆரம்ப விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் மத்திய வரிசையில் ஷோன் மார்ஷ் மீண்டும் ஒருமுறை சிறப்பாக செயற்பட்டார்.
ஒருநாள் போட்டிகளில் தனது 7ஆவது சதத்தை பெற்ற மார்ஷ் ஒருமுனையில் ஓட்டங்களை சேகரித்தார். அவர் ஆறாவது விக்கெட்டுக்கு கிளென் மெக்ஸ்வெல் உடன் இணைந்து 94 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார். கிளென் மெக்ஸ்வெல் 37 பந்துகளில் 48 ஓட்டங்களை பெற்றார்.
எனினும் 123 பந்துகளில் 131 ஓட்டங்களை பெற்ற ஷோன் மார்ஷ் ஆட்டமிழந்த பின் அவுஸ்திரேலிய அணி கடைசி ஓவர்களில் ஓட்டங்களை சேகரிக்க தவறியது. ஒருநாள் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி தடுமாற்றம் கண்டுவரும் நிலையில் தொடர்ந்து சோபித்து வரும் மார்ஷ் கடைசியாக விளையாடிய எட்டு ஒருநாள் இன்னிங்சுகளில் நான்கு சதங்களை பெற்றுள்ளார்.
இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 298 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும், தனது கன்னி போட்டியில் களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் விக்கெட் இன்றி 76 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். தனது கன்னிப் போட்டியில் அதிக ஓட்டங்கள் விட்டுக் கொடுத்த இரண்டாவது இந்திய பந்துவீச்சாளராகவும் அவர் பதிவானர்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதல் விக்கெட்டுகளை காத்துக் கொண்டு ஓட்டங்களை சேகரித்தது. அணித்தலைவர் விராட் கோஹ்லி ஒரு முனையில் சிறப்பாக துடுப்பாடி ஒருநாள் போட்டிகளில் தனது 39 ஆவது சதத்தை பெற்றார்.
எனினும் இந்திய அணி 39 பந்துகளில் 57 ஓட்டங்களை எடுக்க வேண்டி இருந்தபோது கோஹ்லி ஆட்டமிழந்தார். அப்போது களத்தில் இருந்த அனுபவ வீரர் டோனி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் துடுப்பெடுத்தாடினார்.
>>சதமடித்தும் மோசமான சாதனையை நிலைநாட்டிய ரோஹித் சர்மா
கடைசி ஓவருக்கு இந்திய அணி 7 ஓட்டங்களை பெற வேண்டி இருந்தபோது தோனி இரண்டாவது பந்தில் சிக்ஸர் ஒன்றை விளாசியமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய அணி 49.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
போட்டியின் சுருக்கம்
அவுஸ்திரேலியா – 298/9 (50) – ஷோன் மார்ஷ் 131, கிளென் மெக்ஸ்வெல் 48, மார்கஸ் ஸ்டொய்னிஸ் 29, புவனேஷ்வர் குமார் 4/45, மொஹமட் ஷமி 3/58
இந்தியா – 299/4 (49.2) – விராட் கோஹ்லி 104, MS டோனி 55*, ரோஹித் ஷர்மா 43, கிளென் மெக்ஸ்வெல் 1/16
முடிவு – இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<