டுபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று முடிந்திருக்கும் ஆசியக் கிண்ணத் தொடரின், “சுபர் 4” சுற்றின் ஐந்தாவது போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியை சமநிலை செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியை சமநிலையில் முடித்திருந்த போதிலும் இந்தியா 14 ஆவது முறையாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்று வருகின்ற ஆசியக் கிண்ணத் தொடரின், இறுதிப் போட்டியில் விளையாடும் முதல் அணியாக மாறியிருக்கின்றது.
இறுதிப்போட்டிக்கான வாய்பபை அதிகரித்துக்கொண்ட இந்திய அணி
நேற்று (25) ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற அஸ்கர் ஆப்கான் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தெரிவு செய்திருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) பங்களாதேஷ் அணியுடனான, போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்த காரணத்தினால் அவர்களுக்கு ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு பறிபோயிருந்தது. இதனால், ஆப்கான் அணியினர் ஆறுதல் வெற்றியொன்றுடன் தொடரை முடிக்கும் நோக்கோடு இந்திய அணியை எதிர்கொண்டிருந்தனர்.
இதேவேளை, பாகிஸ்தான் அணியுடன் தமது இறுதிப் போட்டியில் வென்ற இந்தியா, அணித் தலைவர் ரோஹித் சர்மா, சிக்கர் தவான் போன்ற முக்கிய வீரர்களுக்கு இப்போட்டியில் ஓய்வு வழங்கியிருந்தது. இதனால், இந்தியாவை மஹேந்திர சிங் டோனி அணித் தலைவராக வழிநடாத்தினார். இதன் மூலம் டோனி, இந்தியாவை 200 ஒரு நாள் போட்டிகளில் தலைமை தாங்கிய புதிய மைல்கல்லை பதிவு செய்திருந்தார்.
தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய ஆப்கான் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக மொஹமட் செஹ்சாத் மற்றும் ஜாவேத் அஹ்மதி ஆகியோர் களமிறங்கினர்.
ஜாவேத் அஹ்மதி வெறும் 5 ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேற, அவரை அடுத்து வந்த ஆப்கானின் நம்பிக்கை வீரர்களான றஹ்மத் சாஹ், ஹஸ்மத்துல்லாஹ் சஹிதி, அணித்தலைவர் அஸ்கர் ஆப்கான் போன்றோர் இந்திய அணியின் சுழலை எதிர்கொள்ள முடியாமல் மைதானத்தை விட்டு 5 ஓட்டங்களை கூட தாண்ட முடியாமல் ஓய்வறை திரும்பினர்.
எனினும், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களத்தில் நின்ற மொஹமட் செஹ்சாத் அதிரடியான முறையில் பெற்றுக் கொண்ட அவரது ஐந்தாவது ஒரு நாள் சதத்துடன், ஆப்கான் அணியின் துடுப்பாட்டத்துறைக்கு நங்கூரமிட்டார். 116 பந்துகளை எதிர்கொண்ட செஹ்சாத் 7 சிக்ஸர்கள் மற்றும் 11 பெளண்டரிகள் அடங்கலாக 124 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
தொடர்ந்து மத்திய வரிசையில் துடுப்பாடிய மொஹமட் நபியின் அரைச்சதத்தோடு, ஆப்கான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஆப்கான் அணியின் துடுப்பாட்டத்தில் மொஹமட் நபி 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 56 பந்துகளுக்கு 64 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சு சார்பாக, ரவிந்திர ஜடேஜா 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.
T10 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்களின் விபரம் வெளியானது
பின்னர் ஆப்கானிஸ்தான் அணியினால், வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 253 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி, 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 252 ஓட்டங்களை மட்டுமே குவித்தது. இதனால், போட்டி சமநிலையில் (Tie) நிறைவுற்றது.
இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பாக, லோக்கேஷ் ராகுல் 66 பந்துகளுக்கு 60 ஓட்டங்களையும், அம்பதி ராயுடு 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 49 பந்துகளுக்கு 57 ஓட்டங்களையும் பெற்றிருந்த அதேநேரம் தினேஷ் கார்த்திக் 44 ஓட்டங்களுடன் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.
போட்டியை இறுதி ஓவர் வரை விறுவிறுப்பாக கொண்டு செல்ல காரணமாக அமைந்த ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் அப்தாப் அலம், மொஹமட் நபி மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்ட நாயகன் விருது ஆப்கான் துடுப்பாட்ட வீரர் மொஹமட் செஹ்சாத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆப்கான் அணி, ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இருந்து வெளியேறி இருப்பதால், இன்றைய “சுபர் 4“ சுற்றின் பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணியே இறுதிப் போட்டிக்கு தெரிவாகும்.
போட்டியின் சுருக்கம்
ஆப்கானிஸ்தான் – 252/8 (50) – மொஹமட் செஹ்சாத் 124(116), மொஹமட் நபி 64(56), ரவீந்திர ஜடேஜா 46/1(10)
இந்தியா – 252 (49.5) – லோக்கேஷ் ராகுல் 60(66), அம்பதி ராயுடு 57(49), தினேஷ் கார்த்திக் 44(66), மொஹமட் நபி 40/2(10), ரஷீத் கான் 41/2(9.5)
முடிவு – போட்டி சமநிலையில் (Tied) முடிவுற்றது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…