இந்திய 19 வயதின் கீழ் அணியின் 6 வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று!

ICC U19 Cricket World Cup 2022

302

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுவரும் ஐசிசி 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத்தொடரில் விளையாடிவரும் இந்திய அணியின் தலைவர் யாஷ் துல் மற்றும் உப தலைவர் எஸ்.கே.ரஷீட் ஆகியோர் உட்பட 6 வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது.

அயர்லாந்து அணிக்கு எதிரான தங்களுடைய இரண்டாவது லீக் போட்டியில் விளையாடுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 பரிசோதனையில், குறித்த ஆறு வீரர்களுக்கும் கொவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

>>ஐசிசி இன் ஆடவர் T20 அணியில் இடம்பிடித்தார் வனிந்து

எனவே, யாஷ் துல் மற்றும் எஸ்.கே.ரஷீட் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டதுடன், அணியின் தலைவராக நிஷாந் சிந்து நியமிக்கப்பட்டார். அதுமாத்திரமின்றி, 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத்துக்கான குழாத்தில் 17 பேர் உள்ளடக்கப்பட்டிருந்த காரணத்தால், அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், தங்களுடைய பதினொருவரை சிக்கல்களுக்கு மத்தியில் உருவாக்கியதுடன், போட்டியிலும் இந்திய அணி வெற்றியை பதிவுசெய்திருந்தது.

யாஷ் துல் மற்றும் எஸ்.கே.ரஷீட் ஆகியோருக்கு அடுத்தப்படியாக மனவ் பரக், சித்தார்த் யாதவ், ஆரத்யா யாதவ் மற்றும் வாசு வட்ஸ் ஆகியோர் கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

தற்போது இந்திய அணியின் 6 வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், வீரர்கள் பற்றாக்குறை அணிக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அயர்லாந்து போட்டி நிறைவடைந்துள்ள நிலையில், இதுதொடர்பான தீர்மானங்களை இந்திய கிரிக்கெட் சபை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக இந்திய 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத்துக்காக குழாத்தில் மேலதிக வீரர்களாக ரிஷித் ரெட்டி, உதய் சஹாரன், அன்ஷ் கோஷி, அம்ரித் ராஜ் உபதயய் மற்றும் பி.எம்.சிங் ராதோர் ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர். எனினும், இவர்கள் அணியுடன் இணைந்திருக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய 19 வயதின் கீழ் அணியானது, அயர்லாந்து அணிக்கு எதிரான தங்களுடைய இரண்டாவது லீக் போட்டியில், 174 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியினை பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<