இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையானது இந்திய அணியுடனான தொடரை இரண்டு வாரங்கள் பிற்போட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய ஒருநாள் அணிகளின் தரவரிசையில் இரண்டாமிடத்தில் காணப்படுகின்ற அணியும், உலகக்கிண்ணத்தை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படும் அணியுமான இந்திய அணியானது, உலகக்கிண்ண தொடர் நிறைவடைந்தவுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தரவரிசையில் ஒன்பதாமிடத்தில் காணப்படும் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இருதரப்பு தொடரில் விளையாடுவதற்கான ஏற்பாட்டினை சர்வதேச கிரிக்கெட் பேரவை மேற்கொண்டிருந்தது.
>> எதிர்பார்க்காத முடிவுகளை காட்டக்கூடிய இலங்கை அணிக்கு ஒற்றுமை தேவை – சமிந்த வாஸ்
இவ்வருட ஐ.சி.சி உலகக்கிண்ண தொடரானது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் இம்மாத இறுதியில் (30) ஆரம்பமாகி ஜூலை 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இவ்வுலகக்கிண்ண தொடர் நிறைவுற்ற கையுடன் அதாவது ஜூலை மாதம் மூன்றாம் வார ஆரம்பத்தில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் மூன்று டி20 சர்வதேச போட்டிகள் போன்றவற்றில் விளையாடும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையானது வீரர்களின் நலன் கருதி தொடரை இரண்டு வாரங்கள் பிற்போடுமாறு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தது. இவ்வாறான நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் நடாத்தப்படும் இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளை போன்று மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையினாலும் கரீபியன் ப்ரீமியர் லீக் போட்டித்தொடர் வருடா வருடம் நடாத்தப்பட்டு வருகின்றது.
7 ஆவது கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரானது இவ்வருடம் (2019) ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் செம்டம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை நடாத்துகின்ற அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையினால் திட்டமிடப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் இந்திய கிரிக்கெட் சபையானது இவ்வாறு ஒரு கோரிக்கையை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையிடம் முன்வைத்திருந்த நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் சபைக்கு சங்கடமான நிலைமை தோன்றியிருந்தது. இருந்தாலும் வீரர்களின் நலன் கருதி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை ஏற்றுக்கொண்டுள்ளது.
அதன் அடிப்படையில், ஜூலை மூன்றாம் வாரத்தில் ஆரம்பமாகவிருந்த குறித்த தொடரானது இரண்டு வாரங்கள் பிற்போடப்பட்டு ஆகஸ்ட் முதல் வாரம் தொடக்கம் செப்டம்பர் முதல் வாரம் வரை மேற்கிந்திய தீவுகளின் பல்வேறு மைதானங்களில் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரானது செப்டம்பர் 4 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள அடிப்படையில் திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
>> ஐ.பி.எல் தொடரிலிருந்து அனைத்து ஆஸி. வீரர்களும் வெளியேற்றம்
இந்திய – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இருதரப்பு தொடரின் 2 டெஸ்ட், 3 ஒருநாள் சர்வதேச மற்றும் 3 டி20 சர்வதேச போட்டிகளினது திகதி, மைதானம் குறிக்கப்பட்ட அட்டவணையானது இம்மாதம் 13 ஆம் திகதி நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையினுடைய நிர்வாக கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<