மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய குழாம்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ள டெஸ்ட் குழாத்தை பொருத்தவரை அணியின் முன்னணி அனுபவ துடுப்பாட்ட வீரரான செட்டேஸ்வர் புஜாரா நீக்கப்பட்டுள்ளார். இவருடைய கடந்த கால பிரகாசிப்புகளின் அடிப்படையில் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆசியக் கிண்ணம்; பாகிஸ்தான் மீண்டும் இலங்கைக்கு எதிர்ப்பு
செட்டேஸ்வர் புஜாரா அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த போதும், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு அழைக்கப்பட்டிருந்த அஜின்கியா ரஹானே தொடர்ந்தும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார். அத்துடன், அணியின் உப தலைவராகவும் பெயரிடப்பட்டுள்ளார்.
அதேநேரம் உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்துவரும் துடுப்பாட்ட வீரர்களான ருதுராஜ் ரகக்வாட், யசஷ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். முகேஷ் குமார் அணியில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னணி வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் சமிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா டெஸ்ட் குழாம்
ரோஹித் சர்மா (தலைவர்), சுப்மான் கில், ருதுராஜ் கைக்வாட், விராட் கோஹ்லி, யசஷ்வி ஜெய்ஸ்வால், கே.எஸ். பரத், அஜின்கியா ரஹானே, இசான் கிஷன், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, சர்துல் தாகூர், அக்ஷர் படேல், மொஹமட் சிராஜ், முகேஷ் குமார், ஜயதேவ் உனட்கட், நவ்தீப் சைனி
அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் குழாத்தை பொருத்தவரை சஞ்சு சம்சன் மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார். கே.எல்.ராஹுல் உபாதையிலிருந்து குணமடைந்து வருவதுடன், ரிஷப் பண்ட் சிகிச்சைப்பெற்று வருகின்றார். எனவே விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக இசான் கிஷனுடன், இவர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
அணித்தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஹர்திக் பாண்டியா உப தலைவராக செயற்படவுள்ளார். ஒருநாள் குழாத்திலிருந்து சகலதுறை வீரர் வொசிங்டன் சுந்தர் நீக்கப்பட்டுள்ளதுடன் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஷர் படேல் ஆகிய இரு சகலதுறை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதேநேரம் மொஹமட் சிராஜுடன் ஜயதேவ் உனட்கட், உம்ரான் மலிக் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் வேகப்பந்துவீச்சாளராக செயற்படவுள்ளனர்.
சுற்றுலா இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஜூலை 12ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், ஒருநாள் தொடர் ஜூலை 27ம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா ஒருநாள் குழாம்
ரோஹித் சர்மா (தலைவர்), சுப்மான் கில், ருதுராஜ் கைக்வட், விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சம்சன், இசான் கிஷன், ஹர்திக் பாண்டியா, சர்துல் தாகூர், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், ஜயதேவ் உனட்கட், மொஹமட் சிராஜ், உம்ரான் மலிக், முகேஷ் குமார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<