இந்திய ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்த இலங்கை

374

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் 110 ஓட்டங்களால் இலங்கை அபார வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு, ஒருநாள் தொடரினையும் 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை அணியானது சுமார் 27 வருடங்களின் பின்னர் இந்தியாவிற்கு எதிராக இருதரப்பு ஒருநாள் தொடர் ஒன்றையும் கைப்பற்றி புதிய வரலாறு படைத்திருக்கின்றது.

>>இங்கிலாந்து தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு!

முன்னர் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகிய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் சரித் அசலன்க இப்போட்டியிலும் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தெரிவு செய்திருந்தார். இப்போட்டிக்கான இலங்கை அணியில் ஒரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சுழல்பந்துவீச்சாளரான அகில தனன்ஞய மகீஷ் தீக்ஸன மூலம் பிரதியிடப்பட்டார்.

மறுமுனையில் இந்த தொடரினை சமநிலைப்படுத்த கட்டாய வெற்றியை எதிர்பார்த்த இந்தியா இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், KL ராகுல் ஆகியோருக்குப் பதிலாக ரியான் பராக், ரிசாப் பாண்ட் ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர். இதில் ரியான் பராக் இப்போட்டி மூலம் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் முதல் முறையாக வாய்ப்பினைப் பெற்றதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கை பதினொருவர்

 

பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலன்க (தலைவர்), ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், துனித் வெல்லாலகே, மகீஷ் தீக்ஸன, அசித பெர்னாண்டோ, ஜெப்ரி வன்டர்செய்

இந்தியா பதினொருவர்

 

ரோஹிட் சர்மா (தலைவர்), சுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிசாப் பாண்ட், சிவம் டுபே, வாஷிங்டன் சுந்தர், அக்ஷார் பட்டேல், குல்தீப் யாதவ், ரியான் பராக், மொஹமட் சிராஜ்

 

பின்னர் போட்டியில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணிக்கு பெதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ ஜோடி சிறந்த ஆரம்பம் வழங்கியது. அணியின் முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 89 ஓட்டங்கள் பகிரப்பட பெதும் நிஸ்ஸங்க இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் குசல் மெண்டிஸ் – அவிஷ்க பெர்னாண்டோ ஜோடி 94 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததோடு, இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டாக சதத்தினை நெருங்கியிருந்த அவிஷ்க பெர்னாண்டோ ரியான் பராக்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழக்க முன்னர் 102 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 96 ஓட்டங்கள் பெற்றார்.

தொடர்ந்த ஆட்டத்தில் இலங்கை அணியின் மத்திய வரிசைத் துடுப்பாட்டம் தடுமாறிய போதிலும் குசல் மெண்டிஸின் பொறுப்பான அரைச்சதத்தோடு, இலங்கை அணியானது 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 248 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் தன்னுடைய 30ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 4 பௌண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் ரியான் பராக் 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க குல்தீப் யாதவ், வோஷிங்டன் சுந்தர், அக்ஷார் பட்டேல் மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 249 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணியானது ஆரம்பத்தில் ரோஹிட் சர்மா மூலம் சிறந்த ஆரம்பம் பெற்ற போதிலும், இலங்கையின் சுழல்வீரர்களான துனித் வெல்லாலகே தனது சுழல் மூலம் இந்திய அணிக்கு தடுமாற்றம் ஏற்படுத்தினார்.

>>இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்த தடுமாற்றத்தில் இருந்து மீள முடியாத இந்திய அணியானது 26.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 138 ஓட்டங்களுடன் போட்டியில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக ரோஹிட் சர்மா 20 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்கள் பெற்றார்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் துனித் வெல்லாலகே 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்த்து தன்னுடைய சிறந்த பந்துவீச்சுப் பெறுதியினைப் பதிவு செய்ய, ஜெப்ரி வன்டர்செய் மற்றும் மகீஷ் தீக்ஸன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தார்.

போட்டியின் ஆட்டநாயகனாகவும் அவிஷ்க பெர்னாண்டோ தெரிவாக, தொடர் நாயகன் விருது துனித் வெல்லாலகேவிற்கு வழங்கப்பட்டது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<