சடுதியான விக்கெட்டுக்களினால் இலங்கை அணிக்கு தோல்வி

1
India tour of Sri Lanka 2024

சுற்றுலா இலங்கை – இந்திய அணிகள் இடையிலான முதல் T20I போட்டியில் இந்தியா 43 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருப்பதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.

>>பினுரவுக்கு மார்பு நோய் தொற்று; மருத்துவமனையில் அனுமதி

முன்னதாக கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை T20I அணியின் புதிய தலைவர் சரித் அசலன்க துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்திய வீரர்களுக்கு வழங்கினார்.

அதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணிக்கு யஷாஷ்வி ஜெய்ஸ்வால் – சுப்மான் கில் ஜோடி மிகச் சிறந்த ஆரம்பத்தினை வழங்கியது. இந்திய அணியின் முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 74 ஓட்டங்கள் பகிரப்பட முதல் விக்கெட்டாக சுப்மான் கில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழக்கும் போது ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 34 ஓட்டங்கள் பெற்றார்.

இதனையடுத்து புதிய ஓவரினை வீசிய வனிந்து ஹஸரங்க யஷாஷ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டினை கைப்பற்றினார். ஜெய்ஸ்வால் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 40 ஓட்டங்கள் பெற்றார்.

அதன் பின்னர் இந்திய அணிக்கு அதன் தலைவர் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிசாப் பாண்ட் ஆகியோர் கைகொடுக்க அவ்வணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 213 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய துடுப்பாட்டத்தில் அதன் தலைவர் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 8 பௌண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்கள் எடுத்தார். அத்துடன் அது அவரது 20ஆவது T20I அரைச்சதமாகவும் அமைந்தது. ரிசாப் பாண்ட் 33 பந்துகளில் 49 ஓட்டங்கள் எடுத்தார்.

இலங்கைப் பந்துவீச்சில் மதீஷ பதிரன 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி தன்னுடைய சிறந்த பந்துவீச்சினைப் பதிவு செய்தார். இதேவேளை வனிந்து ஹஸரங்க, டில்சான் மதுசங்க மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 214 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் மூலம் சிறந்த ஆரம்பத்தினைப் பெற்றது.

தொடர்ந்து போட்டியில் இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்த குசல் மெண்டிஸ் 27 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்கள் பெற்றார். குசல் மெண்டிஸ் ஆட்டமிழந்த போதிலும் பெதும் நிஸ்ஸங்க இலங்கை அணிக்கு தொடர்ந்து அரைச்சதம் விளாசி நம்பிக்கை தந்தார்.

எனினும் பெதும் நிஸ்ஸங்கவின் விக்கெட்டின் பின்னர் தொடர் இடைவெளியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்த இலங்கை அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 170 ஓட்டங்களுடன் போட்டியில் தோல்வியினைத் தழுவியது. அதாவது ஒரு கட்டத்தில் 140 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்த இலங்கை அணியானது 30 ஓட்டங்களுக்குள் தமது எஞ்சிய விக்கெட்டுக்கள் அனைத்தினையும் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் பெதும் நிஸ்ஸங்க தன்னுடைய 11ஆவது T20 அரைச்சதத்தோடு 48 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 79 ஓட்டங்கள் எடுத்து போராட்டம் காட்டினார். மறுமுனையில் இந்திய பந்துவீச்சு சார்பில் ரியான் பராக் 3 விக்கெட்டுக்களையும் அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்ஷார் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ் தெரிவாகினார். இலங்கை இந்திய அணிகள் இடையிலான அடுத்த போட்டி நாளை (28) நடைபெறுகின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<