இரண்டாவது T20I போட்டியின் வெற்றி தொடர்பில் கூறும் தனன்ஜய

India tour of Sri Lanka 2021

421

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது T20I போட்டியில் சிறந்த திட்டங்கள் மற்றும் அதற்கான அணியை சரியாக தெரிவுசெய்திருந்தமை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என, இலங்கை அணியின் உப தலைவர் தனன்ஜய டி சில்வா தெரிவித்துள்ளார்.

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20I போட்டி நேற்று (28) நடைபெற்றது. இந்தப்போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. குறித்த வெற்றி தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட தனன்ஜய டி சில்வா,

த்ரில்லர் வெற்றியுடன் T20 தொடரினை சமநிலை செய்த இலங்கை

“நீண்ட காலங்களுக்கு பின்னர் T20I போட்டியில் வெற்றிபெற்றுள்ளோம். இது எமக்கு மிகப்பெரிய வெற்றி. சரியான அணியொன்றையும், சரியான திட்டங்களையும் உருவாக்கியிருந்தோம். தற்போது, போட்டிகளில் வெற்றிபெறுவதை நோக்கி பயணிக்கின்றோம் என நினைக்கிறேன்” என்றார். 

துடுப்பாட்டத்துக்கு கடினமான ஆடுகளத்தில் வெற்றியிலக்கை அடைவதற்காக, தான் ஒருபக்கம் நிதானமாக துடுப்பெடுத்தாடியதுடன், போட்டியை இறுதிவரை கொண்டுசெல்ல முற்பட்டதாகும் தனன்ஜய டி சில்வா குறிப்பிட்டார். அத்துடன், அணியென்ற ரீதியில், துடுப்பாட்டத்தை நகர்த்துவதற்கான பணியை, முகாமைத்துவம் கொடுத்துள்ளதாகவும்,  கடந்த போட்டிகளில் இதனை செய்ய தவறியதுடன், இந்தப்போட்டியில் பணியை சிறப்பாக செய்தமை மகிழ்ச்சியளிக்கிறது எனவும் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், குறித்த வெற்றியிலக்கை அடைவதற்கான திட்டத்தை நகர்த்துவதற்கு, பின்வரிசை துடுப்பாட்ட வீரர்டகளிடம் இருந்து கிடைத்த பங்களிப்பு தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளார்.

“அணியில் உள்ள இறுதி 5 வீரர்களில், மூன்று வீரர்களுக்காவது சிக்ஸர்களை அடிக்க முடியும் என எமக்கு தெரியும். சாமிக்க கருணாரத்ன, வனிந்து ஹசரங்க, இசுரு உதான மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோருக்கும் சிக்ஸர்களை அடிக்க முடியும். போட்டியை இறுதிவரை கொண்டு செல்வதே எமது இலக்காக இருந்தது. 

சாமிக அல்லது வனிந்து ஆகியோரில் ஒருவர் என்னுடன் போட்டியை நிறைவுசெய்வர் என எதிர்பார்த்தேன். அதிர்ஷடவசமாக சாமிக்க போட்டியை என்னுடன் இணைந்து நிறைவுசெய்தார்” என குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான தொடரை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான, T20I போட்டி இன்று (29) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<