இறுதி நேரத்தில் இலங்கை அணியின் திட்டம் என்ன? கூறும் அசலங்க

513

இந்திய அணியின் பின்வரிசை வீரர்கள் துடுப்பெடுத்தாடும் போது, அவர்களின் வெற்றியிலக்குக்கான ஓட்டத்தை அதிகரிக்கவே திட்டமிட்டோம் என இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் சரித் அசலங்க தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப்போட்டி நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அசலங்க இதனை தெரிவித்தார்.

ஷானகவுடன் கருத்து முரண்பாடா? உண்மையை கூறும் மிக்கி ஆர்தர்

“நாம் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்கவே திட்டமிட்டோம். ஆனால், அவர்கள் விக்கெட்டுக்களை விட்டுக்கொடுக்காமல், தேவையான பந்துகளுக்கு ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். குறிப்பாக வனிந்து ஹசரங்கவின் பந்துக்கு ஓட்டங்களை பெற முற்பட்டிருந்தால், இந்திய அணி தோல்வியடைந்திருக்கலாம். எனவே, அவர்களின் திட்டம் சாதகமாகியது”

அதேநேரம், இந்திய அணியின் துடுப்பாட்டத்துக்கு வனிந்து ஹசரங்க மாத்திரமே சவால் கொடுத்தார் எனவும், அவருக்கு துணையாக மற்றுமொரு பந்துவீச்சாளர் இருந்திருந்தால் போட்டியின் திசையை மாற்றியிருக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

“போட்டியில், தோல்வியடைந்தமை தொடர்பில் வருத்தமளிக்கிறது. வெற்றிபெற்றிருக்கலாம் என தோன்றுகிறது. ஆனால், அவர்களுடைய பின்கள துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக ஆடினர். வெற்றியின் முழு பெருமையும் அவர்களையே சாரும். 

வனிந்து ஹசரங்கவுக்கு உதவியாக மற்றுமொரு பந்துவீச்சாளர் இருந்திருந்தால், இரண்டு விக்கெட்டுகள் அளவில் கைப்பற்றியிருந்தாலும், போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியும்” என்றார்.

அத்துடன், இலங்கை பந்துவீச்சாளர்கள் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களுக்கு எவ்வாறு பந்துவீசுவது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சரித் அசலங்க சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், இந்தப்போட்டியில் பெறப்பட்ட அனுபவங்கள் மற்றும் உத்வேகத்துடன் அடுத்துவரும் போட்டிகளில் விளையாடி நாட்டுக்காக வெற்றிபெற எண்ணுகிறோம் எனவும், சரித் அசலங்க குறிப்பிட்டார்.

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் (25) கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<