இலகு வெற்றியினைப் பதிவு செய்த இந்தியா

India tour of Sri Lanka 2021

246
India tour of Sri Lanka 2021 - 1st ODI

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் இலகு  வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

அதோடு இப்போட்டியின் வெற்றியுடன் ஐ.சி.சி. ஒருநாள் சுபர் லீக்கில் வருகின்ற மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரிலும் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது.

>> “வீரர்கள் என்ற ரீதியில் நாட்டுக்காக விளையாட வேண்டும்” – ஷானக

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று (18) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கையின் புதிய அணித்தலைவரான தசுன் ஷானக்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காகப் பெற்றார். 

இன்றைய போட்டிக்கான இலங்கை அணி மூலம் பானுக்க ராஜபக்ஷ ஒருநாள் போட்டிகளில் முதல் தடவையாக விளையாடும் வாய்ப்பினைப் பெற்றதோடு, இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஆகியோரும் ஒருநாள் அறிமுகம் பெற்றுக்கொண்டனர். 

இலங்கை – அவிஷ்க பெர்னாந்து, மினோத் பானுக்க, பானுக்க ராஜபக்ஷ, தனன்ஞய டி சில்வா, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்),  வனிந்து ஹஸரங்க, சாமிக கருணாரட்ன, இசுரு உதான, துஷ்மந்த சமீர, லக்ஷான் சந்தகன்

இந்தியா – சிக்கர் தவான் (தலைவர்), பிரித்வி சாவ், இஷான் கிஷான், மனிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, தீபக் சாஹர், புவ்னேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ்

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைவாக முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு மினோத் பானுக்க, அவிஷ்க பெர்னாந்து ஜோடி சிறந்த ஆரம்பத்தினை கொடுத்தது. இந்த நிலையில் இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்த அவிஷ்க பெர்னாந்து 35 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். 

இதன் பின்னர் புதிய துடுப்பாட்டவீரராக களம் வந்த பானுக்க ராஜபக்ஷ அதிரடி காட்ட முனைந்த போதும் அவரின் துடுப்பாட்ட இன்னிங்ஸ் அவர் 22 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 24 ஓட்டங்கள் பெற்ற நிலையில் நிறைவுக்கு வந்தது. 

>> இந்திய கிரிக்கெட் அணியுடன் ஆடவுள்ள இலங்கை குழாம் வெளியீடு

இதனையடுத்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்த இலங்கை அணிக்கு சரித் அசலன்க – தசுன் ஷானக்க ஜோடி ஐந்தாம் விக்கெடடுக்காக ஆறுதல் இணைப்பாட்டம் (49) ஒன்றினை வழங்கியது. 

இந்த இணைப்பாட்டத்தின் உதவியோடும், இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய சாமிக்க கருணாரட்னவின் துடுப்பாட்டத்தோடும் இலங்கை கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களை குவித்தது. 

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாமிக்க கருணாரட்ன 35 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 43 ஓட்டங்கள் பெற்று அணியில் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களைப் பதிவு செய்ய, இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக்க 39 ஓட்டங்களையும், சரித் அசலன்க 38 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர். 

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர். 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 263 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய கிரிக்கெட் அணி குறித்த வெற்றி இலக்கினை 36.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இலகுவாக அடைந்தது.

>> Video – அணித்தலைவரை தொடர்ச்சியாக மாற்றுவது சிறந்ததா? கூறும் ஷானக!

இந்திய அணியின் வெற்றியினை உறுதி செய்த துடுப்பாட்டவீரர்களில் அதன் தலைவரான சிக்கர் தவான் தன்னுடைய 34 ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 86 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில், தனது கன்னி ஒருநாள் போட்டியில் அரைச்சதம் பெற்ற இஷான் கிஷான் 42 பந்துகளுக்கு 59 ஓட்டங்கள் பெற்றும், பிரித்வீ சாவ் வெறும் 24 பந்துகளுக்கு 9 பெளண்டரிகள் உடன் 43 ஓட்டங்கள் பெற்றும் தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் தனன்ஞய டி சில்வா 2 விக்கெட்டுக்கள், லக்ஷான் சந்தகன் ஒரு விக்கெட் என கைப்பற்றி சிறப்பாக செயற்பட்டும் அவர்களது பந்துவீச்சு வீணானது.

இனி இரண்டு அணிகளும் பங்குபெறும் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (20) ஆரம்பமாகின்றது.

போட்டியின் சுருக்கம்

முடிவு – இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<