ராகுல் – ஐயர் ஜோடியின் சிறப்பான துடுப்பாட்டத்துடன் அடுத்த வெற்றியை சுவைத்த இந்தியா

166
ICC

நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டி20 சர்வதேச போட்டியில் கே.எல் ராகுல் – ஷிரேயஸ் ஐயர் ஜோடியின் சிறப்பான துடுப்பாட்டம் காரணமாக இந்திய அணி 7 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது. 

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஆகிய மூவகையான தொடர்களிலும் விளையாடவுள்ளது. 

ஐயரின் அதிரடி ஆட்டத்துடன் முதல் T20Iயில் இந்தியாவுக்கு வெற்றி

சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து….

இதில் முதல் தொடரான 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் தற்சயம் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி அதிரடி வெற்றி பெற்றிருந்த நிலையில் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (26) அதே ஒக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. இரு அணிகளிலும் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். 

அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் முதல் விக்கெட் பவர் ப்ளேயின் இறுதி பந்தில் வீழ்த்தப்பட்டது. அதிரடியாக ஆடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்டின் குப்டில் 2 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளுடன் 33 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் 9 ஆவது ஓவரில் மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கொலின் முன்ரோ 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணியின் இரு விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டது. முதல் போட்டியில் ஓட்டமொதுவும் பெறாமல் ஆட்டமிழந்த அதிரடி துடுப்பாட்ட வீரர் கொலின் டி க்ரண்ட்ஹோம் இன்றைய போட்டியில் வெறும் 3 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார். அதனை தொடர்ந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

ரோஸ் டெய்லர் மற்றும் டிம் சைப்ரைட் ஆகியோருக்கிடையில் ஐந்தாவது விக்கெட் இணைப்பாட்டமாக 44 ஓட்டங்கள் பகிரப்பட்ட வேளையில் இரண்டு பந்துகள் மாத்திரம் மீதமிருந்த நிலையில் ரோஸ் டெய்லர் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஆனால் இறுதிவரை போராடிய விக்கெட் காப்பாளர் டிம் சைப்ரைட் 2 சிக்ஸர்கள், 1 பௌண்டரியுடன் ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். 

அவிஷ்க பெர்னாண்டோவின் அதிரடி துடுப்பாட்டத்தால் ஹெய்லிஸ் இறுதிப் போட்டிக்கு

அவிஷ்க பெர்னாண்டோவின் அதிரடி…..

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்திய அணியின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், சிவம் துபே, ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 

133 என்ற இலகு வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி கிடைத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹிட் சர்மா 2 பௌண்டரிகளுடன் 8 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய அணித்தலைவர் விராட் கோஹ்லி வெறும் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இந்திய அணி பவர் பிளேயில் 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. 

ஆனால் மூன்றாவது விக்கெட்டுக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கே.எல் ராகுலுடன் இணைந்த இளம் துடுப்பாட்ட வீரர் ஷிரேயஸ் ஐயர் ஜோடி இந்திய அணியை வெற்றியின் பக்கம் அழைத்து சென்றது. இருவரும் இணைப்பாட்டமாக 86 ஓட்டங்களை பகிர்ந்த வேளையில் ஷிரேயஸ் ஐயர் 3 சிக்ஸர்கள், 1 பௌண்டரியுடன் மொத்தமாக 44 ஓட்டங்களை குவித்து ஆட்டமிந்தார். 

ஷிரேயஸ் ஐயர் ஆட்டமிழக்கும் போது இந்திய அணியின் வெற்றிக்கு வெறும் 8 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்டது. நான்காவது விக்கெட்டுக்காக களமிறங்கிய சிவம் துபே சிக்ஸர் விளாச இந்திய அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆடுகளத்தின் மறுமுனையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கே.எல் ராகுல் 2 சிக்ஸர்கள், 3 பௌண்டரிகளுடன் மொத்தமாக 57 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காது காணப்பட்டார். 

டெஸ்ட் தரவரிசையில் அஞ்செலோ மெதிவ்ஸிற்கு முன்னேற்றம்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்…..

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் டிம் சௌத்தி 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், இஷ் சோதி 33 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்திய அணியின் இவ்வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் 2-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது. 

போட்டியின் ஆட்ட நாயகனான நிதானமாக நிலைத்தாடி அரைச்சதம் கடந்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்த கே.எல் ராகுல் தெரிவானார். இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 சர்வதேச போட்டி எதிர்வரும் புதன்கிழமை (29) ஹமில்டனில் நடைபெறவுள்ளது. 

போட்டியின் சுருக்கம்

நியூசிலாந்து – 132/5 (20) – மார்டின் கப்டில் 33 (20), டிம் சைப்ரைட் 33 (26), ரவீந்திர ஜடேஜா 2/18 (4), சிவம் துபே 1/16 (2)

இந்தியா – 135/3 (17.3) – கே.எல் ராகுல் 57 (50), ஷிரேயஸ் ஐயர் 44 (33), டிம் சௌத்தி 2/20 (3.3), இஷ் சோதி 1/33 (4)

முடிவு – இந்தியா 7 விக்கெட்டுக்களினால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<