சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி, 2022ம் ஆண்டுக்கான பருவகாலத்தில் நடத்தப்படும் என இரண்டு கிரிக்கெட் சபைகளும் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் நடைபெற்றன.
T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியுடன் இணையும் மஹேல!
இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில், இந்திய அணி 2-1 என தொடரில் முன்னிலை வகித்திருந்தது. பின்னர், இறுதிப்போட்டி மென்செஸ்டரில் நடைபெறவிருந்த நிலையில், கொவிட்-19 தொற்று காரணமாக, இறுதி டெஸ்ட் போட்டி கைவிடப்பட்டது.
குறிப்பாக இந்தப்போட்டியானது, செப்டம்பர் 10ம் திகதி ஆரம்பமாகவிருந்த நிலையில், போட்டி தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் மீண்டும் குறித்த போட்டியை நடத்துவதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், அடுத்த வருடம் ஆகஸ்ட் மாத காலப்பகுதியில் நடத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ள இந்த போட்டி, தனியொரு போட்டியாக நடைபெறுமா? அல்லது தொடராக நடத்தப்படுமா? என்ற தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.
ஆரம்பத்தில், இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சபைகள், குறித்த டெஸ்ட் போட்டிக்கு பதிலாக 2 T20I போட்டிகளில் விளையாடுவதற்கான தீர்மானங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், அடுத்த ஆண்டு இந்திய அணி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்காக இங்கிலாந்து செல்லவுள்ளதால், நிறைவுபெறாத டெஸ்ட் தொடரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான குறித்த டெஸ்ட் தொடரானது, ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான தொடராக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…