இலங்கை கிரிக்கெட் அணி, எதிர்வரும் நவம்பர் மாதம் இந்தியாவுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. 37 நாட்களைக் கொண்ட இந்த சுற்றுத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று T-20 போட்டிகளில் இந்திய அணியுடன் மோதவுள்ளது.
இதனடிப்படையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியின் 16 வீரர்கள் கொண்ட பெயர்ப் பட்டியலை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் இந்திய சுற்றுப்பயண போட்டி அட்டவணை வெளியீடு
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் நடைபெற்று முடிந்திருக்கும், இலங்கை…
இப்பெயர்ப் பட்டியல் மூலம், கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையுடனான டெஸ்ட் போட்டித் தொடர் ஆரம்பமாவதற்கு முன் மணிக்கட்டு உபாதைக்குள்ளாகியிருந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான முரளி விஜய் மீண்டும் இந்திய டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளார்.
முன்னதாக இந்திய அணி தமது சொந்த மண்ணில் விளையாடியிருந்த அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் முரளி விஜய் காயத்திற்கு உள்ளாகியிருந்தார். இதனால் அவர் அத்தொடரில் ஒரு போட்டியில் பங்கேற்கவில்லை. அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரினை அடுத்து, சிகிச்சைகளுக்காக இங்கிலாந்து பயணமாகிய விஜய், கடந்த பருவகாலத்திற்கான ஐ.பி.எல் தொடரிலும் விளையாடவில்லை.
இதேவேளை, காலியில் நடைபெற்ற இலங்கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் வைரஸ் காய்ச்சல் காரணமாக விலகிய லோகேஷ் ராகுலுக்குப் பதிலாக விளையாடியிருந்த மற்றுமொரு தமிழக வீரரான அபினவ் முகுந்த்துக்கும் இத்தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனினும், இந்திய அணியின் துடுப்பாட்ட தூண்களாக அண்மைக்காலமாக பிரகாசித்து வருகின்ற லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, அஜிங்கியா ரஹானே மற்றும் ஷிகர் தவான் ஆகிய வீரர்களுக்கு இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பை வழங்க அந்நாட்டு தெரிவுக்குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குடும்பத்திற்கே முன்னுரிமை அளிப்பேன்: நிக் போதாஸ்
பாகிஸ்தான் – இலங்கை இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடரில் இம்மாத…
இதேவேளை, இலங்கை அணிக்கெதிராக பங்கேற்கவுள்ள இந்திய அணியில் அனுபவமிக்க பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மீண்டும் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையுடனான டெஸ்ட் போட்டித் தொடரில் இறுதியாக விளையாடியிருந்த குறித்த இரு வீரர்களும், அதன்பிறகு நடைபெற்ற இலங்கை, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அஷ்வின், ஐசிசியின் தரவரிசையில் முதல் இடம், T-20 போட்டிகளில் சிறப்பான ஆட்டம் என முழுமையாக சிறந்த நிலையில் இருந்தார். இந்த நிலையில் அணியின் தலைவராக கோஹ்லி பொறுப்பேற்றதை அடுத்து, இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டதுடன், அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருந்த அஷ்வின் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், இலங்கை தொடருக்கு முன் யோ-யோ பரிசோதனைக்கு முகங்கொடுத்த அஷ்வின், அதில் வெற்றி பெற்றிருந்தார்.
இந்திய அணியில் அஷ்வின் இடம்பெறுவது போலவே நீண்ட நாட்களாக புறக்கணிக்கப்பட்டு வந்த ரவிந்திர ஜடேஜாவும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். அண்மையில் நிறைவுக்கு வந்த ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டியில் 200 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, வீரர்கள் மற்றும் வீரர் உதவிப் பணியாளர்களுக்கான ஐ.சி.சி. நடத்தை விதியை மீறிய குற்றச்சாட்டில் இலங்கை அணியுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 3ஆவது டெஸ்ட் போட்டியின்போது போட்டித் தடைக்குள்ளாகயிருந்த ஜடேஜாவுக்குப் பதிலாக அப்போட்டியில் களமிறங்கிய அக்ஷார் பட்டேலுக்கும், தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள 16 பேர் கொண்ட டெஸ்ட் குழாமில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
Can Sri Lanka save face and avoid another whitewash? – 5th ODI Preview
The fifth and final ODI match between Pakistan and Sri Lanka will be worked out at the…
அத்தோடு, இந்திய அணிக்காக ஒரு நாள் மற்றும் T-20 போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி சகலதுறையிலும் பிரகாசித்து வருகின்ற ஹர்திக் பாண்டியாவும் இந்திய டெஸ்ட் குழாமில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை அணிக்கெதிராக இடம்பெற்ற டெஸ்டிலே இவர் அறிமுகம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பாண்டியா இக்குழாமிலுள்ள இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், மொஹமட் சமி மற்றும் புவ்னேஸ்வர் குமார் ஆகியோருடன் சேர்ந்து வேகப்பந்து வீச்சு துறைக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியை, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோஹ்லி தலைமை தாங்குகின்றார். முன்னதாக இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்காக கோஹ்லி விளையாட மாட்டார் எனவும், அவருக்கு ஓய்வளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால், எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடருக்கு ஆயத்தமாகும் நோக்கில் இலங்கை அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லிக்கு வாய்ப்பளிக்க இந்திய தெரிவுக்குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்திய அணியில் தொடர்ச்சியாக கோஹ்லி விளையாடி வருவது தொடர்பில் இன்று மும்பையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவுக்குழுவின் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் கருத்து வெளியிடுகையில், ”கோஹ்லிக்கு ஓய்வு வழங்குவதற்கு இது சரியான தருணமல்ல. அவர் இந்திய அணிக்காக முக்கிய இன்னிங்ஸ்களில் பிரகாசிக்க வேண்டிய தேவையுள்ளது. ஆனாலும் ஏனைய வீரர்களைப் போல சுழற்சி முறையில் அவருக்கும் ஓய்வினை அளிப்பதற்கு நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்.
குறிப்பாக இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரிலிருந்து அவர் இடைவிடாது விளையாடி வருகின்றார். எனவே, நிச்சயம் இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரின் பிறகு அவருக்கு ஓய்வளிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இவ்விரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. 2ஆவது டெஸ்ட் போட்டி 24ஆம் திகதி நாக்பூரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இறுதி டெஸ்ட் போட்டி டிசம்பர் 24ஆம் திகதி டெல்லியில் நடைபெறவுள்ளது.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரின் மனதை நெகிழவைக்கும் செயல்
தசுன் ஷானக்க பெற்ற அதிரடி சதத்தின் மூலம் மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான…
இந்நிலையில், இலங்கை அணிக்கும், இந்திய கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்குமிடையிலான 2 நாள் பயிற்சிப் போட்டிக்கான குழாமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் அனுபவமிக்க சகலதுறை ஆட்டக்காரரான நாமன் ஓஜா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாமில் தற்போது நடைபெற்று வருகின்ற ரஞ்சி கிண்ண கிரிக்கெட்டில் திறமைகளை வெளிப்படுத்திய சன்ஜு சம்சன், ஜலாஜ் சக்சேனா மற்றும் 20 வயதான வேகப்பந்து வீச்சாளரான அவேஷ் கான் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு நாள் பயிற்சிப் போட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய டெஸ்ட் குழாம்
விராத் கோஹ்லி (அணித் தலைவர்), முரளி விஜய், லோகேஷ் ராகுல், செட்டெஸ்வர் புஜாரா, ஷிகர் தவான், அஜிங்கியா ரஹானே (உப தலைவர்), ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, வித்திமன் சஹா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா, புவ்னேஸ்வர் குமார், மொஹமட் சமி, குல்தீப் யாதவ்