மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய ஒருநாள், டி20 குழாம்கள் அறிவிப்பு

154

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியின் இரு குழாம்களும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ளது.

இருதரப்பு தொடருக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்ற மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி அங்கு இந்திய கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் ஆகிய இரு தொடர்களில் விளையாடவுள்ளது. 

இலங்கையில் மற்றொரு கிரிக்கெட் மைதானம்!

இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் இலங்கை…..

இந்திய டி20 சர்வதேச குழாம்

மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்காக 15 பேர் அடங்கிய குழாம் தேர்வுக்குழுவினால் பெயரிடப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணியுடனான டி20 சர்வதேச தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருந்த விராட் கோஹ்லி மீண்டும் டி20 அணிக்கு திரும்பியுள்ள அதேவேளை அணித்தலைவர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

மேற்கிந்திய தீவுகளுடனான தொடரில் உபதலைவர் ரோஹிட் சர்மாவுக்கு ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் இரு குழாம்களிலும் உபதலைவராகவே இடம்பெற்றுள்ளார். உபாதைக்கு முகங்கொடுத்திருந்த முக்கிய வேகப்பந்துவீச்சாளரான புவ்னேஸ்வர் குமார் மீண்டும் குழாமுக்கு திரும்பியுள்ளார். 

மேலும் டி20 சர்வதேச போட்டிகளில் நீண்ட ஓய்வில் இருந்த சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடருக்கு திரும்பியுள்ளார். இதேவேளை பங்களாதேஷ் அணியுடனான டி20 தொடரில் இடம்பெறாதிருந்த சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் டி20 குழாமில் இடம்பெற்றுள்ளார். 

இறுதியாக 2017ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டி20 சர்வதேச போட்டியில் விளையாடி, தொடர்ச்சியாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடிவந்த வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஷமி 2 வருடங்களின் பின்னர் டி20 சர்வதேச குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார். புவ்னேஸ்வர் குமார் மற்றும் மொஹமட் ஷமி ஆகியோரின் மீள்வருகையினால் இறுதியாக பங்களாதேஷூடனான டி20 சர்வதேச தொடரில் விளையாடிய கலீல் அஹமட், குழாமில் இடம்பெற்றிருந்த சர்துல் தாகூர் ஆகியோருக்கு தற்போது இடம் கிடைக்கவில்லை. 

லசித் மாலிங்கவின் ஓய்வு தொடர்பில் வெளியான புதிய தகவல்!

இலங்கை T20I அணியின் தலைவர் லசித்…..

இதேவேளை பங்களாதேஷ் தொடருக்கான குழாமில் இடம்பெற்று ஒரு போட்டியேனும் விளையாடாத நிலையில் விக்கெட் காப்பாளர் சஞ்சு சம்சன் மேற்கிந்திய தீவுகளுடனான குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் சகலதுறை வீரர் குர்ணால் பாண்டியாவும் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.  

டி20 சர்வதேச தொடரின் முதல் போட்டி அடுத்த மாதம் 6ஆம் திகதி மும்பையில் நடைபெறவுள்ளது. 8 மற்றும் 11ஆம் திகதிகள் முறையே இரண்டாவது, மூன்றாவது டி20 சர்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளன.

டி20 சர்வதேச தொடருக்கான இந்திய குழாம்

விராட் கோஹ்லி (அணித்தலைவர்), ரோஹிட் சர்மா, ஷிகர் தவான், கே.எல் ராகுல், சிரேஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், சிவம் டுபே, வொஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், தீபக் சஹார், மொஹமட் ஷமி, புவ்னேஸ்வர் குமார்

இந்திய ஒருநாள் சர்வதேச குழாம்

இந்திய கிரிக்கெட் அணியானது சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் ஆடுகிறது. முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி அடுத்த மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் 15 பேர் அடங்கிய ஒருநாள் குழாம் வெளியிடப்பட்டுள்ளது. 

டி20 சர்வதேச தொடருக்காக வெளியிடப்பட்டுள்ள குழாமிலிருந்து ஒரேயொரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டி20 குழாமில் இடம்பெற்ற தமிழக வீரர் வொஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக துடுப்பாட்ட சகலதுறை வீரரான கேதர் யாதவ் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார். 

பங்களாதேஷ் அணியுடனான டி20 தொடரில் ஹெட்ரிக் சாதனை படைத்த தீபக் சஹார் 2018ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெற்றதன் பின்னர் தற்போது மீண்டும் ஒருநாள் குழாமில் இடம்பெற்றுள்ளார். மேலும் பங்களாதேஷூடனான டி20 தொடரில் சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்ட சிவம் டுபே கன்னி ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இரண்டு கைகளாலும் பந்துவீசி, விக்கெட் வீழ்த்தி அசத்திய தென்னாபிரிக்க வீரர்

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும்……

ஒருநாள் சர்வதேச தொடருக்கான இந்திய குழாம்

விராட் கோஹ்லி (அணித்தலைவர்), ரோஹிட் சர்மா, ஷிகர் தவான், கே.எல் ராகுல், சிரேஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், சிவம் டுபே, கேதர் யாதவ், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், தீபக் சஹார், மொஹமட் ஷமி, புவ்னேஸ்வர் குமார்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<