உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்தியாவிற்கு பின்னடைவு

England Tour India 2024

58
England Tour India 2024

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இந்திய அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைத்ராபாத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி கடைசி வரை போராடி 28 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

அதேபோல, அவுஸ்திரேலியா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டி சாதனை படைத்தது.

இந்நிலையில், ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி புள்ளிப்பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்த நிலையிலும் அவுஸ்திரேலியா அணி 55 சதவீதத்துடன் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. அதேசமயம், இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் 33.33 சதவீத புள்ளிகளுடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 43.33ஆக குறைந்துள்ளதுடன், 5ஆம் இடத்திற்கும் பின்தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய அணி இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில் தற்போது 3 இடங்கள் சரிந்து 5ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பங்களாதேஷ் ஆகிய 3 அணிகளும் தலா 50 சதவிகிதத்துடன் புள்ளிப் பட்டியலில் முறையே 2ஆவது, 3ஆவது மற்றும் 4ஆவது இடங்களில் உள்ளன. அத்துடன், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் முறையே 6 முதல் 9ஆவது இடங்களில் உள்ளன.

இது இவ்வாறிருக்க, புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகளே 2023-2025 பருவகாலத்துக்கான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<