இந்திய அணி வீரர்களுக்கு அபராதம் விதித்த ஐசிசி

1329
BCCI

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட தாமதமாக பந்துவீசிய இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

இதன்படி, இந்திய அணிக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 60 சதவீதத்தை அபராதமாக ஐசிசி விதித்துள்ளது

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் விளையாடி வருகின்றது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்றுமுன்தினம் (18) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணி 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், குறித்த போட்டியில் இந்திய அணி பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. 50 ஓவர்களை வீசுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் 3 ஓவர்கள் குறைவாக வீசியதால் இந்திய அணி வீரர்களின் போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இந்திய அணிக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 60 சதவீதத்தை அபராதமாகவும் ஐசிசி விதித்துள்ளது.

போட்டியின் பின்னர், அனில் சவுத்ரி மற்றும் நிதித் மேனன் ஆகிய கள நடுவர்கள் இருவரும் போட்டி மத்தியஸ்தர் ஜவகல் ஸ்ரீநாத்திடம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய இதுதொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா குற்றத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், வீரர்களுக்கான அபாரதம் உறுதிசெய்யப்பட்டது.

இதன்படி, வீரர்கள் மற்றும் வீரர்களுக்கான உதவியாளர்கள் தொடர்பில் ஐசிசியின் ஒழுங்கு விதிமுறைகளின் 2.22 சரத்துக்கு அமைய, குறித்த ஓவர் ஒன்றுக்காக பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்ட குறித்த அணியின் வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்க முடியும் என ஐசிசி அனுமதி வழங்கியுள்ளது.

இதனால், தாம் செய்த தவறினை ரோஹித் சர்மா ஒப்புக் கொண்டதால், அது தொடர்பில் எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளத் தேவையில்லை என ஐசிசி மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை (21) ராய்பூரில் நடைபெறவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<