நடப்புச் சம்பியன் இந்தியாவுடனான போட்டியில் இலங்கைக்கு தோல்வி

686

டுபாய் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்ற கட்புலனற்றோருக்கான ஐந்தாவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இன்று (10) நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் நடப்புச் சம்பியன் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.

டுபாயின் அஜ்மான் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் அஜே குமார் ரெட்டி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

கட்புலனற்றோருக்கான உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கைக்கு முதல் வெற்றி

டுபாய் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்ற..

இதன்படி, களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கௌஷால் சில்வா மற்றும் சுரங்க சம்பத் ஜோடி 104 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொண்டனர். எனினும், சில்வா, 64 ஓட்டங்களைப் பெற்றநிலையில் துரதிஷ்டவசமாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதேநேரம், அவுஸ்திரேலிய அணியுடன் நேற்று நடைபெற்ற போட்டியில் சதங்களைக் குவித்து அசத்தியிருந்த ருவன் வசந்த அதனைத் தொடர்ந்து களமிறங்கி 2 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டு ஆட்டமிழந்தார்.

எனினும், மறுபுறத்தில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய சுரங்க சம்பத் 68 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சுனில் ரமேஷின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய அணித்தலைவர் சன்தன தேசப்பிரிய, போட்டியின் இறுதிவரை நிதானமாக விளையாடி 67 பந்துகளுக்கு முகங்கொடுத்து 97 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இதன்படி, 40 ஓவர்கள் நிறைவில் இலங்கை கட்புலனற்றோர் அணி, 8 விக்கெட்டுக்களை இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக சுனில் ரமேஷ் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதனையடுத்து 359 என்ற இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய கட்புலனற்றோர் அணியினர் இலங்கை அணியின் பந்துவீச்சை எளிதாக முகங்கொடுத்து 8 ஓவர்கள் மீதமிருக்க வெற்றியிலக்கை அடைந்தனர். இந்த வெற்றி இலக்கை அடைய அவர்கள் தமது 4 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்னர்.

அவ்வணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி வானவேடிக்கை நிகழ்த்திய தீபக் மலிக், ஆட்டமிழக்காமல் 178 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டு இந்தியாவை வெற்றிபாதைக்கும் இட்டுச் சென்றார்.

வரலாற்றில் முதல்முறை இடம்பெற்ற இளையோர் உலகக் கிண்ண ஆரம்ப விழா

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால்..

போட்டியின் ஆட்டநாயகனாக தீபக் மலிக் தெரிவாக, பெறுமதி மிக்க வீரருக்கான விருதை இலங்கையின் சந்தன தேசப்பிரிய பெற்றுக்கொண்டார்.

இதன்படி, இந்திய கட்புலனற்றோர் அணி, இம்முறை கட்புலனற்றோர் உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. முன்னதாக அவுஸ்திரேலியாவுடன் நடைபெற்ற முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இலங்கை அணி தாம் பங்குபற்றிய முதல் போட்டியில் அவுஸ்திரேலியாவை 303 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது. இந்நிலையில், எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ள லீக் போட்டியில் நேபாள அணியை இலங்கை சந்திக்கவுள்ளது.

இலங்கை – 358/8 (40) – சந்தன தேஷப்பிரிய 97*, சுரங்க சம்பத் 68, கே. சில்வா 64, சுனில் ரமேஷ் 3/43

இந்தியா – 359/4 (31.1) – தீபக் மலிக் 178*, பிரகாஷ் ஜெயராம் 75, வெங்கடேஸ்வர் ராஓ 28, சந்தன குமார 1/40

முடிவு – இந்திய கட்புலனற்றோர் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி