இந்திய – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான இந்திய குழாமில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளதுடன், முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடருக்கான 14 பேர் கொண்ட குழாமை இந்திய கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு நேற்று (11) அறிவித்துள்ளது.
>> இலங்கையின் இயற்கை அழகை இரசிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி
அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாமில், ஆசியக் கிண்ணத் தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருந்த முழுநேர அணித் தலைவர் விராட் கோஹ்லி மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார் என்பதுடன், இளம் அதிரடி துடுப்பாட்ட வீரர் ரிஷாப் பாண்ட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சமி ஆகியோருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
உலகக் கிண்ணத் தொடருக்கான மூன்றாம் மற்றும் நான்காம் வேகப்பந்து வீச்சாளர்களை கண்டறியும் முகமாக மொஹமட் சமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வேகமாக 92 ஓட்டங்களை குவித்திருந்ததன் காரணமாக தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷாப் பாண்ட் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். தினேஷ் கார்த்திக் ஆசியக் கிண்ணத் தொடரில் சிறப்பாக விளையாடியிருந்தார். இவர் 54.5 என்ற சராசரியில் 109 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதனால் கார்த்திக்கின் வெளியேற்றம் தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.
எனினும், கார்த்திக்கின் நீக்கம் மற்றும் ரிஷாப் பாண்டின் வருகை குறித்து தேர்வுக் குழுத் தலைவர் பிரசாத் குறிப்பிடுகையில், “நாம் இரண்டாவது விக்கெட் காப்பாளரை தெரிவுசெய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். தினேஷ் கார்த்திக்குக்கு நாம் பல வாய்ப்புகளை வழங்கியிருக்கிறோம். தற்போது ரிஷாப் பாண்டுக்கு வாய்ப்புகளை வழங்குகிறோம். இவர்கள் இருவரில் யார் சிறந்த விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர் என்பதை கணிக்க வேண்டும்” என்றார்.
இதேவேளை, மொஹமட் சமி, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இறுதியாக விளையாடியிருந்தார். அதன் பின்னர் ஒருநாள் அணியில் அவர் இணைக்கப்படவில்லை. இந்திய அணி தங்களது இரண்டு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களை தெரிவுசெய்துள்ளது (புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா). உலகக் கிண்ணத்துக்கான நான்காவது வேகப்பந்து வீச்சாளர்களுக்கான தேடுதலை இந்தியா மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக மொஹமட் சமி, சர்துல் தாகூர், கஹ்லீல் அஹமட் ஆகிருக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
>> கட்புலனற்றோர் முத்தரப்பு டி-20 தொடரில் இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்திய இலங்கை
அத்துடன், உபாதைக்குள்ளாகிய சகலதுறை வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோர் குழாமில் இணைக்கப்படவில்லை. இருவரின் உபாதையும் முழுமையாக குணமடையவில்லை என்பதால் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ரவீந்திர ஜடேஜா ஒருநாள் குழாமில் இணைக்கப்பட்டுள்ளார். ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடிய ஜடேஜா 7 விக்கெட்டுகள் மற்றும் முக்கியமான நேரத்தில் ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததன் மூலம் அணியில் இடத்தை தக்கவைத்துள்ளார்.
ரவீந்திர ஜடேஜா சகலதுறை வீரராக பெயரிடப்பட்டிருந்தாலும், குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோருடன் இணைந்து மூன்றாவது சுழல் பந்து வீரராக பந்து வீச்சை பலப்படுத்துவார் என்பதையும் கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.
இந்திய ஒருநாள் குழாம்
விராட் கோஹ்லி (தலைவர்), ரோஹித் சர்மா, சிக்கர் தவான், அம்பத்தி ராயுடு, மனிஷ் பாண்டே, மஹேந்திர சிங் டோனி, ரிஷாப் பாண்ட், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், மொஹமட் சமி, கஹ்லீல் அஹமட், சர்துல் தாகூர், கே.எல். ராஹுல்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<