இந்திய அணிக்கு புதிய தலைவர்

1233
India ODI Squad Announced

அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதற்கட்டமாக நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது. அதன் பிறகு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கும் இடையே முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், குறித்த இரண்டு போட்டிகளையும் கைப்பற்றிய இந்திய அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் இந்தூர் மற்றும் அகமதாபாத் மைதானங்களில் நடைபெறுகிறது. டெஸ்ட் தொடர் முடிவுற்றதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடுகிறது. இந்நிலையில் இந்த இரண்டு தொடர்களுக்குமான இந்திய அணிகளையும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

தனிப்பட்ட காரணங்களால் இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ரோஹித் சர்மா விளையாடுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதனால் முதலாவது ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியை வழிநடத்தவுள்ளார். இதன் மூலம் முதல் முறையாக ஒருநாள் போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா தலைவராக செயல்படவுள்ளார். ஏனைய இரண்டு போட்டிகளிலும் சர்மா விளையாடாவிட்டால் குறித்த போட்டிகளிலும் பாண்டியா தலைவராக செயற்பட வாய்ப்புள்ளது.

முன்னதாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின்போது முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் உதவி தலைவராக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். இந்த தொடரிலும் அவருக்கு உதவி தலைவராக பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து ஒருநாள் தொடரின்போது காயம் காரணமாக விலகிய ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார். அதேபோல, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய ஷாபாஸ் அஹ்மட் மற்றும் ரஜத் பட்டிதார் ஆகியோர் இந்த அணியில் இடம் பெறவில்லை.

உபாதை காரணமாக சுமார் 7 மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்து, தற்போது அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருது வென்ற ரவீந்திர ஜடேஜாவுக்கும் இந்த ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

திருமணம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடாத கேஎல் ராகுலும் ஒருநாள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதுதவிர, 18 பேர் கொண்ட ஒருநாள் அணியில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் இந்திய ஒருநாள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இறுதியாக, 2013ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் ஆடிய உனட்கட்டுக்கு அதன்பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனிடையே, ஜஸ்பிரித் பும்ரா காயத்தில் இருந்து குணமடைந்தும், ஓய்வுக்காக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு பெயரிடப்பட்ட இந்திய அணியையே இரு நாடுகளுக்கு இடையே நடைபெறவுள்ள மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கும் பெயரிட தேர்வுக்குழுவால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி மார்ச் 17ஆம் திகதி மும்பையிலும், இரண்டாவது போட்டி 19ஆம் திகதி விசாகப்பட்டினத்திலும், மூன்றாவது போட்டி 22ஆம் திகதி சென்னையிலும் நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய ஒருநாள் குழாம்

ரோஹித் சர்மா (தலைவர்), சுப்மன் கில், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கேஎல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (உதவி தலைவர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், வொஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், மொஹமட் ஷமி, மொஹமட் சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல், ஜெய்தேவ் உனட்கட்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<