SAFF 17 வயதின்கீழ் சம்பியன்ஷிப் கிண்ணம் இந்தியா வசம்

SAFF Under 17 Championship 2022

296
U17 Football Champions India

தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) 17 வயதின்கீழ் சம்பியன்ஷிப் 2022 தொடரின் இறுதிப் போட்டியில் நேபாளம் அணியை 4 – 0 என வீழ்த்திய இந்திய அணி தொடரின் சம்பியன் கிண்ணத்தை தம்வசப்படுத்திக்கொண்டது.

இந்த தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை 2-1 எனவும், நேபாளம் அணி போட்டிகளை நடாத்தும் இலங்கை அணியை 6-0 எனவும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.

ஏற்கனவே, தொடரின் அனைத்துப் போட்டிகளும் இடம்பெற்ற கொழும்பு குதிரைப் பந்தயத்திடல் அரங்கில் புதன்கிழமை (14) இரவு இந்த இறுதிப் போட்டி ஆரம்பமானது.

குழுநிலைப் போட்டியில் நேபாளம் வீரர்கள் இந்தியாவை 3-1 என வீழ்த்தியிருந்தமையினால் இந்த இறுதி மோதல் மிகவும் எதிர்பார்ப்பு மிக்கதாக இருந்தது.

போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் நேபாளம் வீரர்கள் எதிரணியின் கோல் எல்லையில் கவுண்டர் அட்டக் முறையில் கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்டாலும், இந்திய பின்கள வீரர்கள் அவற்றை லாவகமாகத் தடுத்தனர்.

எனினும், போட்டியின் 20ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் கய்டே எதிரணியின் கோல் எல்லையில் இருந்து கோல் பெட்டிக்குள் உயர்த்தி செலுத்திய பந்தை பொபி சிங் ஹெடர் செய்து போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.

தொடர்ந்து அடுத்த 10 நிமிடங்களில் மைதானத்தின் மத்திய பகுதியில் இருந்து எதிரணியின் கோல் எல்லைக்கு உயர்த்தி செலுத்திய பந்தை வேகமாக சென்று பெற்ற இந்திய வீரர் கொரு சிங், பந்தை கோல் எல்லையில் இருந்து கம்பங்களுக்குள் செலுத்தி இந்திய அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றார்.

தொடர்ந்து போட்டி 40ஆவது நிமிடத்தை அண்மித்த வேளையில், நேபாளம் அணியின் தலைவர் பிரஷான்த் லக்சம் இந்திய வீரரை முறையற்ற விதத்தில்

தாக்கியமைக்காக நடுவரால் நேரடியாக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால், எஞ்சிய நேரத்தை நேபாளம் அணி 10 வீரர்களுடனேயே விளையாடியது.

போட்டியின் முதல் பாதி நிறைவில் இந்திய இரண்டு கோல்களால் முன்னிலை பெற்றது.

முதல் பாதி: இந்தியா 2 – 0 நேபாளம்

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 20 நிமிடங்களை அண்மிக்கும்போது சக வீரர் வேகமாக கொடுத்த பந்தை பெற்ற இந்திய அணியின் தலைவர் வன்லல்பெக குயிடே எதிரணியின் இடது பக்க கோணர் திசையில் இருந்து பந்தை உயர்த்தி கோலுக்குள் செலுத்தி போட்டியின் அடுத்த கோலையும் பெற்றார்.

எஞ்சிய நேரத்திலும் இந்திய வீரர்கள் அதிக ஆதிக்கத்துடன் விளையாடிய நிலையில் இந்திய அணிக்கு மாற்று வீரராக வந்த அமன் போட்டியின் உபாதையீடு நேரத்தில் நான்காவது கோலைப் பதிவு செய்தார்.

எனவே, போட்டி நிறையில் 4-0 என வெற்றி பெற்ற இந்திய வீரர்கள் SAFF 17 வயதின்கீழ் சம்பியன்ஷிப் 2022 தொடரின் சம்பியன்களாக மகுடம் சூடிக்கொண்டனர்.

முழு நேரம்: இந்தியா 4 – 0 நேபாளம்

கோல் பெற்றவர்கள்

  • இந்தியா – பொபி சிங் எந்த்ரென்பம் 19’, கொரு சிங் 30’, வன்லல்பெக குயிடே 63’, அமன் 90+3’

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்

  • நேபாளம் – தான் சிங்
  • சிவப்புஅட்டை பெற்றவர்கள்
  • நேபாளம் – பிரஷான்த் லக்சம் 20’

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<