இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணத்தில், இந்திய அணி எந்தத் தடைகளுமின்றி பங்கேற்கும் என்பதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது (BCCI) இன்று (7) உறுதிப்படுத்தியுள்ளது.
அத்தோடு, எட்டு அணிகள் பங்குபெறும் இத்தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் பெயர்ப் பட்டியலும் சிரேஷ்ட தெரிவுக் குழாமின் கலந்துரையாடலினைத் தொடர்ந்து திங்கட்கிழமை வெளியிடப்படவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி நகரில் இடம்பெற்றிருந்த சிறப்பு பொதுக் குழு கூட்டத்தின் அடிப்படையில் (SGM), இந்த முடிவோடு (இந்திய அணி சம்பியன்ஸ் கிண்ணத்தில் பங்கேற்பது) சேர்த்து இந்திய கிரிக்கெட் வாரியமானது குறிப்பிட்ட அறிக்கை ஒன்றினையும் ஐ.சி.சி. இற்கு கையளிக்காமல் இருக்கின்ற முடிவினையும் எடுத்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி இடம் முன்வைத்திருக்கும் கோரிக்கைளை நிறைவேற்றும் வரை இது தொடரும் என ஊடகம் ஒன்றின் வாயிலாகத் தெரியவருகின்றது.
ஏப்ரல் 26ஆம் திகதி நடைபெற்றிருந்த ஐ.சி.சி இன் பொதுக்குழு கூட்டமொன்றின் போது, நிர்வாக கட்டமைப்பிலும், நிதி பகிர்வு முறையிலும் எடுக்கப்பட்டிருந்த தீர்மானங்கள், அங்கத்துவர்கள் பங்கேற்கும் உடன்படிக்கையினை மீறி (MPA) அமைந்திருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.சி. சி. இற்கு தனது எதிர்ப்பினை காட்டி இருந்தது. அத்தோடு, இதற்கு மாற்றுத்தீர்வு பெற்றுத்தருமாறும் வலியுறுத்தி இருந்தது.
இதற்காக இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றின் கிரிக்கெட் சபைகளின் தேவைகளை அடக்கிய 63 பக்கங்களைக் கொண்ட ஆவணம் ஒன்று ஐ.சி.சி இடம் வழங்கப்பட்டுள்ளது. அங்கத்துவர்கள் பங்கேற்கும் உடன்படிக்கை உருவாக்கப்பட்ட 2014ஆம் ஆண்டு ஐ.சி.சி இன் தலைவராக N. ஸ்ரீனிவாசன் இருந்த போது ஐ.சி.சி இன் மொத்த வருமானமான 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 570 மில்லியன் டொலர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் வருவாயாக பெறும்படி செய்யப்பட்டிருந்தது.
எனினும், அண்மைய ஐ.சி. சி. இன் ஏப்ரல் பொதுக்குழு கூட்டத்தின் அடிப்படையில் அது 293 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டிருந்தது. தற்போதைய பேச்சு வார்த்தைகளின் போது, ஐ.சி.சி இன் தற்போதைய தலைவரான சஷாங் மனோகர் அவ்வருமானத்துடன் இன்னும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை அதிகரித்து தருவதெனக் கூறியும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது அதனை ஏற்க மறுத்துவிட்டது.