ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை சரியான நேரத்துக்குள் வீச தவறிய குற்றச்சாட்டுக்காக இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதன்முறையாக டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தை தமதாக்கியது.
>> மதுஷிகாவின் அபாரத்தால் இலங்கை இளையோர் மகளிருக்கு முதல் வெற்றி
குறித்த இந்தப் போட்டியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் 5 ஓவர்களை வீச தவறிய காரணத்துக்காக இந்திய அணியின் வீரர்களுக்கு போட்டிக்கட்டணத்தில் 100 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் 4 ஓவர்களை வீச தவறிய காரணத்துக்காக 80 சதவீதம் அபராதமாக அறவிடப்பட்டுள்ளது.
ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் விதிமுறையின் படி நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் ஒரு ஓவரை வீச தவறினால் 20 சதவீதம் போட்டிக்கட்டணத்தில் அபராதமாக விதிக்கப்படும். அதன்படி இரண்டு அணிகளுக்கும் மேற்குறிப்பிட்ட அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சுப்மான் கில் தன்னுடைய ஆட்டமிழப்பு குறித்து சமுகவலைத்தளத்தில் விமர்சனங்களை வெளியிட்டிருந்த காரணத்தால் அவருக்கு ஒரு தரமிறக்கல் புள்ளி மற்றும் போட்டிக்கட்டணத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<